
கணவரை இழந்த பெண்ணை காதலித்து திருமணம் செய்துகொண்ட இளைஞரை பெண்ணின் உறவினர்கள் கொடூரமாக கொலை செய்த சம்பவம் மதுரை மாவட்டத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கணவரை இழந்த பெண்ணுடன் காதல்
மேலூர் அருகே பூதமங்கலம் பொட்டப்பட்டியை சேர்ந்த 21 வயது சதீஷ்குமார் கூலி வேலைக்கு சென்று வந்துள்ளார். அப்போது தும்பப்பட்டியைச் சேர்ந்த கணவரை இழந்த ராகவி என்பவருடன் காதல் ஏற்பட்டுள்ளது. குடும்பத்தினரின் எதிர்ப்பை மீறி வீட்டிலிருந்து வெளியேறி திருமணம் செய்து திருச்சியில் வசித்து வந்துள்ளனர்.
இதனால் கடும் ஆத்திரத்தில் இருந்த ராகவியின் பெற்றோர், வீட்டிலிருந்த நகைகளை ராகவி திருடிச் சென்றதாக போலீஸில் புகார் செய்துள்ளார். இதனால், பிரச்னை வேண்டாமென்று ராகவியை அவர் பெற்றோர் வீட்டில் விட்டுவிட்டு, வெளியூரில் வேலை செய்து வந்துள்ளார் சதீஷகுமார்.
`என்னை கொன்று விடுவார்கள்’
உறவினர்களின் தொடர் கண்காணிப்பில் வீட்டிற்குள் அடைத்து வைக்கப்பட்ட ராகவி, ஒரு சந்தர்ப்பத்தில் ‘என்னை கொன்று விடுவார்கள், வந்து மீட்டுச்செல்’ என்று மொபைல் மூலம் சதீஸ்குமாருக்கு தெரிவித்திருக்கிறார். அதோடு கடந்த 16 ஆம் தேதி ஊருக்கு வந்த சதீஸ்குமார் ராகவியை அவர் வீட்டிலிருந்து மீட்டு, கொட்டாம்பட்டி காவல் நிலையத்துக்கு சென்று தங்களை சேர்த்து வைக்கும்படி கேட்டுள்ளனர்.
அதோடு ராகவியின் சகோதரர் ராகுல் உட்பட உறவினர்களை அழைத்து இரவு 12 மணிவரை பேச்சுவார்த்தை நடத்திய காவல்துறையினர், மறுநாள் விசாரணைக்கு வருமாறு இருதரப்பிடமும் சொல்லி அனுப்பியுள்ளனர்.

ராகவியுடன் சதீஸ்குமார் டூவீலரில் கிளம்பிச் சென்றபோது பின் தொடர்ந்து காரில் வந்த ராகவியின் சகோதரர் ராகுலும் உறவினர்களும், அய்யாபட்டி அருகே டூவீலர் மீது இடித்துள்ளனர். அதில் இருவரும் நிலை தடுமாறி சாலையில் விழ, சதீஸ்குமாரை கடுமையாக தாக்கிவிட்டு சென்றுள்ளனர். காயமைடந்து கிடந்த ராகவி, காவல்துறைக்கு போன் செய்தபின் கொட்டாம்பட்டி காவல்துறையினர் வந்து மீட்டுள்ளனர்.
சதீஸ்குமார் இறந்துவிட, ராகவி மருத்துவ சிகிச்சையில் உள்ளார். அவரின் புகாரின்பேரில் சகோதரர் ராகுல் உள்ளிட்ட 8 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ள காவல்துறையினர் குற்றவாளிகளை தேடி வருகின்றனர. இந்த சம்பவம் மேலூர் வட்டாரத்தில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.