• August 18, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: யாரேனும் உடல் எடை குறைந்தாலே, ‘சுகர் வந்துருச்சா’ என்று கேட்பவர்கள்தான் அதிகம். அதே சமயத்தில், எடையைக் குறைத்தால் நீரிழிவு வராமல் தடுக்கலாம் என்றும் மருத்துவர்கள் அட்வைஸ் செய்கிறார்கள். நீரிழிவுக்கும் உடல் எடைக்கும் என்ன தொடர்பு, டயாபட்டீஸ் வந்தவர்களுக்கு உடல் எடை குறைவதை எப்படிப் புரிந்துகொள்வது?

பதில் சொல்கிறார், சென்னையைச் சேர்ந்த நீரிழிவு சிறப்பு மருத்துவர் பரணிதரன்.

நீரிழிவு மருத்துவர் பரணிதரன்

இந்தியாவில் தற்போது 10 கோடிக்கும் மேலானோருக்கு நீரிழிவு இருக்கிறது. சுமார் 13 கோடி பேர் நீரிழிவுக்கு முந்தைய ப்ரீ டயாபட்டீஸ் நிலையில்  இருக்கிறார்கள். இந்த ப்ரீ டயாபட்டீஸ் கொண்ட 13 கோடி பேர் எப்போது வேண்டுமானாலும் நீரிழிவு நோயாளிகளாக மாறலாம். அந்த அளவுக்கு உடல்பருமனின் ஆபத்தும் உள்ளது.

நம்முடைய உணவில் மாவுச்சத்து அதிகமாக இருக்கிறது. உடல்ரீதியான செயல்பாடுகள் குறைவாக உள்ளன. இதனால் எடை அதிகரிப்பு என்பதும், நீரிழிவு என்பதும் மிகவும் கவனிக்க வேண்டிய பிரச்னைகளாக உள்ளன. உடல் பருமன் இன்சுலின் வேலை செய்வதைத் தடை செய்வதால் ‘இன்சுலின் ரெஸிஸ்டன்ஸ்’ எனப்படும் இன்சுலின் எதிர்ப்புத்தன்மையை உருவாக்குகிறது. அதனால் இந்தியாவில் உடல் பருமன் என்பது நீரிழிவு ஏற்படுவதற்கான அபாய காரணிகளில் முக்கியமானதாகவும் உள்ளது.

நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனும் ஏற்படும்; உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.

சர்க்கரை நோய் இருப்பவர்களுக்கு அடிக்கடி சிறுநீர் கழிக்க வேண்டும் என்ற உந்துதல் வருவதைப் போல, அதிக தாகம் ஏற்படுவதைப் போல, அதிகம் பசி உணர்வு ஏற்படுவதைப் போல எடை இழப்பும்  முக்கியமான ஓர் அறிகுறியாகவே இருக்கும். அதனால்தான் சர்க்கரைநோய் வந்துவிட்டால் ஒருவரின் எடை குறைந்துவிடும் என்றும் பொதுவாகச் சொல்கிறோம். ஆனால், இதில் மற்றொரு கோணமும் உண்டு. நீரிழிவு நோயாளிகளுக்கு உடல் பருமனும் ஏற்படும்; உடல் பருமன் கொண்டவர்களுக்கு நீரிழிவு ஏற்படுகிறது என்றும் புரிந்துகொள்ளலாம்.

எனவே, எடையைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருப்பது நீரிழிவு உள்பட பல பாதிப்புகளிலிருந்தும் நம்மைப் பாதுகாக்கும்.

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.  

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *