
குன்னூர்: நீலகிரி வனக்கோட்டம் குந்தா வனச் சரகத்துக்கு உட்பட்ட கிளிஞ்சாடா கிராமத்தில் உள்ள தனியார் தேயிலைத் தோட்டத்தில் பெண் சிறுத்தை இறந்து கிடப்பதாக நேற்று வனத் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து, அங்கு சென்ற வனத் துறையினர், சிறுத்தையின் உடலைக் கைப்பற்றினர்.
தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணைய வழிகாட்டுதல்படி, நீலகிரி வனக்கோட்ட உதவி வனப் பாதுகாவலர் தலைமையில், முதுமலை புலிகள் காப்பக உதவி வனக் கால்நடை மருத்துவர் மற்றும் அதிகரட்டி உதவி கால்நடை மருத்துவர் ஆகியோர் கொண்ட குழுவினரின் மேற்பார்வையில், சிறுத்தையின் சடலம் உடற்கூறு ஆய்வு செய்யப்பட்டது. வேறு வன விலங்குகளுடன் ஏற்பட்ட மோதலால், சிறுத்தை இறந்திருக்கலாம் என்று வனத் துறையினர் தெரிவித்தனர்.