• August 18, 2025
  • NewsEditor
  • 0

விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் செயல்வீரர்கள் கூட்டம் அக்கட்சியின் பொதுச் செயலாளர் டி.டி.வி தினகரன் தலைமையில் நடைபெற்றது.

அப்போது செய்தியாளர்களை சந்தித்த டி.டி.வி.தினகரன் கூறுகையில், “முன்னாள் முதல்வர் ஓ.பன்னீர்செல்வத்தை பா.ஜ.க-வை சேர்ந்தவர்கள் உறுதியாக கூட்டணிக்குள் கொண்டு வர வேண்டும். தேர்தலின் வெற்றிக்கு அது உதவி செய்யும்.

அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தோடு இணைந்து ஓ.பி.எஸ் தேர்தலை சந்திப்பார். அவருடன் நான் தொடர்பில் இருந்தாலும் பா.ஜ.க தலைவர்கள் தான் அவரை மீண்டும் கூட்டணிக்கு கொண்டு வர வேண்டும்.‌

டிடிவி தினகரன்

அ.தி.மு.க-வை பற்றி பல விமர்சனங்கள் வந்து கொண்டிருக்கிறது. அதை உரியவர்கள் சரி செய்ய வேண்டும். இல்லை என்றால் அது தேர்தலில் மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தும்.

ஒவ்வொரு மாவட்டத்திலுள்ள நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் ஏதாவது ஒரு தொகுதியில் நான் போட்டியிட வேண்டும் என்ற ஆர்வத்தில் செயல்படுகிறார்கள். இந்த தேர்தலில் நான் உறுதியாகப் போட்டியிடுவேன். அது எந்த தொகுதி என்பது 2026 ஜனவரி மாதம் உங்களுக்கு தெரியும். மாவட்டத்திற்கு ஒரு தொகுதி என்று அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் போட்டியிடும்.

தமிழகத்தில் தேசிய ஜனநாயக கூட்டணியை பலப்படுத்தி திமுகவை வீழ்த்தும் நோக்கில் அமித்ஷா கடினமான முயற்சி மேற்கொண்டு வருகிறார். தேசிய ஜனநாயக கட்சியின் முதல்வர் வேட்பாளரை அவர்கள் சொல்கின்ற போது அமமுக ஆதரிப்போம்.

தமிழ்நாடு முழுவதும் சட்டம் ஒழுங்கு மோசமாக உள்ளது. நான்கரை ஆண்டுகள் இதுவரை நான் கேள்விப்படாத அளவுக்கு மோசமான ஆட்சி நடைபெற்று வருகிறது. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாடு மக்கள் இதற்கு ஒரு தீர்வு காண்பார்கள். தற்போது நிலவும் அரசியல் போக்கை பார்த்தால் வரும் தேர்தலின் போது நான்கு முனை போட்டியாக இருக்கலாம் என்று நினைக்கிறேன். வாக்காளர் அட்டை திருத்தம் ஜனவரி மாதம் வரை நடைபெற உள்ளது. குளறுபடிகளை தேர்தல் ஆணையத்தில் முறையிட்டு வாக்காளர் அட்டை பெற்றுத்தர அரசியல் கட்சிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

டிடிவி தினகரன்

திருமாவளவன் கடந்த ஓராண்டாக குழப்பத்தில் இருக்கிறார் என்று நினைக்கிறேன். தூய்மை பணியாளர்களில் பெரும்பாலானோர் பட்டியல் இனத்தைச் சேர்ந்தவர்கள். அவர்கள் தங்களுக்கு பணி நிரந்தரம் வேண்டும் என்று கோரிக்கை விடுகின்றனர். உங்களுக்கு அது வேண்டாம் என்று திருமாவளவன் சொல்வது ஆளுங்கட்சி கூட்டணியில் இருப்பதால் தட்டிக் கேட்க முடியாத பதிலை சொல்வதாக நினைக்கிறேன்.

வாரம் ஒரு முறை பட்டாசு ஆலை விபத்து உயிரிழப்பு ஏற்படுவது வருந்தத்தக்கது. ஆட்சியாளர்கள், மாவட்ட ஆட்சியர்கள், அதிகாரிகள், அரசாங்கம் தலையிட்டு உயிரிழப்புகள், விபத்துகள் ஏற்படாமல் சரியான திட்டத்தை வகுத்து செயல்பட வேண்டும் என்பது அனைவரின் விருப்பம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *