• August 18, 2025
  • NewsEditor
  • 0

ஜகதீப் தன்கர் கடந்த ஜூலை 21ம் தேதி, துணைக் குடியரசுத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். வருகின்ற செப்டம்பர் 9ம் தேதி அடுத்த துணைக் குடியரசுத் தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நடைபெற்றுள்ளது.

இந்த நிலையில் நேற்று (ஆகஸ்ட் 17) தேசிய ஜனநாயகக் கூட்டணியின் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார் சி.பி.ராதாகிருஷ்ணன். முன்னாள் தமிழ்நாடு பாஜக மாநிலத் தலைவர் – தற்போதைய மகாராஷ்டிரா ஆளுநர்.

சி.பி.ராதாகிருஷ்ணனை வேட்பாளராக அறிவிக்கும் முடிவை பிரதமர் நரேந்திர மோடி, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா உள்ளிட்ட மூத்த தலைவர்கள் கலந்துகொண்ட நாடாளுமன்ற குழு கூட்டத்தில் எடுத்துள்ளனர்.

CP Radhakrishnan

இவரது தேர்வு பாஜகவுக்கு அரசியல் ரீதியாக பலனளிக்கக் கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஏனென்றால் தமிழகத்தில் காலூன்ற திணறிவரும் சூழலில் தமிழக மக்களின் கவனத்தை ஈர்க்க சி.பி.ராதாகிருஷ்ணனின் முகம் உதவலாம் எனக் கூறப்படுகிறது.

அத்துடன் பாஜக வலிமையாக இருக்கும் கொங்கு பகுதியைச் சேர்ந்தவர் என்பதும் அங்கு செல்வாக்குமிக்கவர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

யார் இந்த சி.பி.ராதாகிருஷ்ணன்?

சந்திராபுரம் பொன்னுசாமி ராதாகிருஷ்ணன் கிட்டத்தட்ட 5 தசாப்த கால அரசியல் அனுபவம் கொண்டவர். 1957-ம் ஆண்டு அக்டோபர் 20ம் தேதி திருப்பூரில் பிறந்தார். இளநிலை வணிக நிர்வாகம் பட்டம் பெற்றவர்.

விளையாட்டில் ஈடுபாடுகொண்ட சுறுசுறுப்பான இளைஞானாக வளர்ந்தார். மாணவராக இருந்த காலத்திலேயே ஆர்.எஸ்.எஸில் இணைந்து செயல்பட்டுள்ளார். பின்னர் ஜன சங்கம் கட்சியில் சேர்ந்துள்ளார். மிக இளம் வயதிலேயே இவர் இந்திராகாந்தியின் எமர்ஜென்சிக்கு எதிரான மனநிலையைக் கொண்டிருந்துள்ளார். ஜன சங்கத்தில் மாநில செயற்குழு உறுப்பினராக உயர்ந்துள்ளார்.

Radhakrishnan

கோவை குண்டுவெடிப்பு சம்பவம்

1996 ஆம் ஆண்டு, தமிழ்நாட்டில் பாரதிய ஜனதா கட்சியின் (BJP) செயலாளராக நியமிக்கப்பட்டார். 1998ம் ஆண்டு பிப்ரவரி 14ம் தேதி கோவையில் நடந்த குண்டுவெடிப்பு சம்பவம் சி.பி.ராதாகிருஷ்ணன் வாழ்க்கையில் மிகப் பெரிய திரும்ப்புமுனையாக அமைந்தது. குண்டு வெடிப்பைத் தொடர்ந்து இந்து மதத்தினரின் வாக்குகள் ஒரு முனையில் குவிந்தன.

அப்போது நடந்த நாடாளுமன்ற தேர்தலில் 1,50,000 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றிபெற்றார் சி.பி.ராதாகிருஷ்ணன். தமிழ்நாட்டில் பாஜகவின் அரசியல் வரலாற்றில் இது குறிப்பிடத்தக்க வெற்றியாகும்.

தமிழ்நாட்டிலிருந்து மேற்கொள்ளப்பட்ட சில அரசியல் நகர்வுகளால் 1999-ம் ஆண்டு மீண்டும் தேர்தலை எதிர்கொள்ளும் சூழல் வந்தது. கோவை மக்களின் நம்பிக்கையை எளிதாக பெற்றுவிட முடியும் என மிகுந்த தன்னம்பிக்கையுடன் தேர்தலை எதிர்கொண்டார். 55,000 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றியும் பெற்றார்.

வாஜ்பாய் உடன் உறவு

நாடாளுமன்ற உறுப்பினராக இருந்த காலத்தில், ஜவுளித்துறைக்கான நாடாளுமன்ற நிலைக்குழுவின் தலைவராகப் பணியாற்றினார். பொதுத்துறை நிறுவனங்களுக்கான நாடாளுமன்றக் குழு மற்றும் நிதிக்கான ஆலோசனைக் குழுவிலும் உறுப்பினராக இருந்தார். பங்குச் சந்தை ஊழலை விசாரிக்கும் நாடாளுமன்ற சிறப்புக் குழுவின் உறுப்பினராக இருந்தார்.

வாஜ்பாய் உடன் ராதாகிருஷ்ணன்

முன்னாள் பிரதமர் அடல் பிகாரி வாஜ்பாயுடன் நெருங்கிய உறவைக் கொண்டிருந்தார் ராதாகிருஷ்ணன்.

அவர் ஐ.நா. பொதுச் சபைக்கான (2004) நாடாளுமன்றக் குழுவிலும், தைவானுக்கான முதல் இந்தியக் குழுவிலும் இருந்தார். ஐ.நாவில் மனிதாபிமான உதவி மற்றும் பேரிடர் நிவாரண ஒருங்கிணைப்பு, பெண்கள் முன்னேற்றம் மற்றும் குழந்தைகள் உரிமைகள் தொடர்பாக உரையாற்றியுள்ளார்.

ரத யாத்திரை

2004 முதல் 2007 வரை பாஜகவின் மாநிலத் தலைவராக இருந்தார். 2003ம் ஆண்டு திமுக கூட்டணியிலிருந்து வெளியேறியது தமிழகத்தில் பாஜகவுக்கு பின்னடைவாகப் பார்க்கப்பட்டது. எனினும் 2004-ம் ஆண்டு ஜெயலலிதாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி கூட்டணியை உறுதி செய்தார். எனினும் தேர்தலில் வெற்றியைக் கைப்பற்ற முடியாமல் போனது.

பாஜக தலைவராக தமிழகம் முழுவதும் 93 நாள்கள் 19000 கி.மீ ரத யாத்திரையை நடத்தினார் ராதாகிருஷ்ணன். இது அவரது செல்வாக்கை வெகுவாக உயர்த்தியது. தமிழகத்தில் பாஜவுக்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக்கொடுத்தது.

3 மாநிலங்களில் ஆளுநர் பதவிகள்

2014 தேர்தலில் தோல்விக்குப் பிறகு, 2016 முதல் பொதுப்பணித்துறையில் தென்னை நார் வாரியத் தலைவராக பதவி வகித்தார். கடைசியாக 2019 தேர்தலில் போட்டியிட்டவர் அதிலும் தோல்வியடைந்தார். 2020 முதல் 2022 வரை, அவர் கேரளாவிற்கான பாஜகவின் அகில இந்தியப் பொறுப்பாளராக இருந்தார்.

2023 பிப்ரவரியில் ஜார்கண்ட் ஆளுநராக நியமிக்கப்பட்டார். 2024 மார்ச் மாதம் தெலங்கானா ஆளுநராகவும் புதுச்சேரி லெப்டினண்ட்-கவர்னராகவும் கூடுதல் பொறுப்புகளை ஏற்றார்.

30 ஜூலை 2024 ஜார்கண்ட், தெலுங்கானா ஆளுநர் பதவிகளிலிருந்து விலகியவர், அடுத்த நாளே மகாராஷ்டிரா ஆளுநராகப் பதவியேற்றார். எந்த மாநிலத்தில் இருந்தாலும் தொடர்ந்து தமிழக அரசியலை கவனிப்பவராகவும், கருத்துகள் தெரிவிப்பவராகவும் இருந்துள்ளார் ராதாகிருஷ்ணன்.

தற்போது துணைக் குடியரசுத் தலைவர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளார். அவரது அரசியல் வாழ்க்கையில் இது மிக முக்கிய மைல் கல்லாகப் பார்க்கப்படுகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *