
திருவண்ணாமலை: திட்டங்களுக்கு பெயர் வைத்துக்கொள்வதில் முதல்வர் ஸ்டாலினுக்கு இணையில்லை. 4 ஆண்டுகளாக நிறைவேற்றாத திட்டங்களை, 7 மாதங்களில் நிறைவேற்றப் போகிறார்களா என்று அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி கூறினார். ‘மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம்’ என்ற பிரச்சாரப் பயணத்தை மேற்கொண்டுள்ள பழனிசாமி, திருவண்ணாமலை மாவட்டத்தில் திருவண்ணாமலை, கீழ்பென்னாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிகளில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
திருவண்ணாமலை அண்ணா சிலை அருகே நேற்று முன்தினம் இரவு பொதுமக்களிடையே பழனிசாமி பேசியதாவது: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலை தொல்லியல் துறை கைப்பற்ற முயன்றபோது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஜெயலலிதா உச்ச நீதிமன்றம் வரை சென்று, கோயிலை மீட்டெடுத்தார்.