
திருச்சி: சாதிய படுகொலைகளை விசாரிக்க தனி விரைவு நீதிமன்றம் அமைக்க வேண்டும் என புதிய தமிழகம் கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி வலியுறுத்தியுள்ளார். திருநெல்வேலியில் ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை செய்யப்பட்டதைக் கண்டித்து, புதிய தமிழகம் கட்சி சார்பில் திருச்சி ஆட்சியர் அலுவலகம் அருகில் நேற்று நடைபெற்ற ஆர்ப்பாட்டத்துக்கு கட்சித் தலைவர் கிருஷ்ணசாமி தலைமை வகித்தார். நிர்வாகி ஷியாம் கிருஷ்ணசாமி முன்னிலை வகித்தார்.
பின்னர், செய்தியாளர்களிடம் கிருஷ்ணசாமி கூறியதாவது: ஐ.டி. ஊழியர் கவின் படுகொலை விவகாரத்தில் சிபிசிஐடி விசாரணை மூலம் தீர்வு கிடைக்குமா என்று தெரியவில்லை. எனவே, அந்த வழக்கை சிபிஐ விசாரணைக்கு மாற்ற வேண்டும். நான் எம்எல்ஏவாக இருந்த 2011 முதல் 2016-ம் ஆண்டு வரை நூற்றுக்கணக்கான சாதிய படுகொலைகள் நிகழ்ந்துள்ளன. அப்போது இருந்த அரசு உரிய நடவடிக்கை எடுக்காததால், தற்போது வரை இது தொடர்கதையாகி வருகிறது.