• August 17, 2025
  • NewsEditor
  • 0

ராகுல் காந்தி வாக்குத் திருட்டு குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ள நிலையில், இன்று பத்திரிகையாளர் சந்திப்பை நடத்தியது தேர்தல் ஆணையம்.

ராகுல் காந்திக்கு கெடு விதித்த ECI

அதில், இன்னும் 7 நாட்களுக்குள் ராகுல் காந்தி புகார்களுக்கான ஆதாரங்களுடன் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய வேண்டுமென்றும் அப்படி செய்யவில்லை என்றால் பொதுவெளியில் மன்னிப்புக் கேட்க வேண்டுமென்றும் கூறியிருக்கிறது.

“இந்த இரண்டைத் தவிர மூன்றாவது தேர்வு கிடையாது. 7 நாட்களுக்குள் பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்யப்படவில்லை என்றால் இந்தக் குற்றச்சாட்டுகள் அனைத்தும் ஆதாரமற்றவை என்றே அர்த்தம்” எனக் கூறியுள்ளார் தலைமைத் தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.

Rahul Gandhi

மேலும் “ஒரே நபர் இரண்டு வாக்குகள் போட்டதாகக் கூறப்படுவது கவலையை ஏற்படுத்தியது. ஆனால் அதற்கான எந்த ஆதாரமும் இல்லை. இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளுக்கு தேர்தல் ஆணையமும் நாட்டு மக்களும் அச்சப்படப்போவதில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.

‘0’ முகவரி

அத்துடன், “பாலங்களுக்கு, தெருவிளக்குகளுக்கு அடியில் தங்கியிருப்போர், அங்கீகரிக்கப்படாத இடங்களில் தங்கியிருப்போருக்கும் வாக்காளர் அட்டைக் கொடுக்கப்பட்டுள்ளது. அவர்களது முகவரியில் வீட்டு எண் ‘0’ எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.” என்றும் விளக்கம் அளித்தார்.

 தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.
தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார்.

ஒரு தலைபட்சமான செயல்பாடு

தேர்தல் ஆணையத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு தொடங்குவதற்கு முன்னரே தனது வாக்காளர் அதிகார யாத்திரையைத் தொடங்கிய ராகுல் காந்தி, பாஜகவினர் புகாரளிக்கும்போது ஏற்றுக்கொள்ளும் தேர்தல் ஆணையம் தான் குற்றச்சாட்டு வைக்கும்போது பிரமாணப் பத்திரம் கேட்பதாக குற்றம்சாட்டி, ஒருதலைப் பட்ச செயல்பாட்டைக் கண்டித்திருந்தார்.

‘வேடிக்கையானது’

தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் பேச்சுக்கு எதிர்வினையாற்றிய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெய்ராம் ரமேஷ், “தலைமைத் தேர்தல் ஆணையரும் அவரது இரண்டு தேர்தல் ஆணையர்களும், மலையளவு சான்றுகள் இருக்கும்போதும், ஆளும் கட்சிக்கும் எதிர்க்கட்சிக்கும் இடையே வேறுபாடு இல்லை எனக் கூறுவது வேடிக்கையானது.

Jairam Ramesh
Jairam Ramesh

ராகுல் காந்தி எழுப்பிய ஒரு கூர்மையான கேள்விக்குக்கூட தலைமைத் தேர்தல் ஆணையர் அர்த்தமுள்ள பதிலை அளிக்கவில்லை.

மூன்று நாட்களுக்கு முன்னர் பீகாரில் SIR திருத்தத்தால் நீக்கப்பட்ட 65 லட்சம் வாக்காளர்களின் பட்டியலை வெளிடுவதற்கு எதிராக தேர்தல் ஆணையம் முன்வைத்த ஒரு வாதத்தைக் கூட உச்ச நீதிமன்றம் ஏற்றுக்கொள்ளவில்லை. தேர்தல் ஆணையத்தின் கடுமையான ஆட்சேபனைகளைக் கடந்தும் 65 லடசம் பேரின் பட்டியலைத் தெளிவாகத் தேடக்கூடிய வகையில் வெளியிட உச்ச நீதிமன்றம் வலியுறுத்தியிருக்கிறது.

மேலும் வாக்காளர் சன்றாக ஆதார் அட்டையை ஏற்றுக்கொள்ளவும் வலியுறுத்தியது. தேர்தல் ஆணையம் நீதிமன்றத்தின் ஒவ்வொரு உத்தரவையும் ஆமோதித்தது.” எனக் கூறியுள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *