• August 17, 2025
  • NewsEditor
  • 0

‘தூய்மைப் பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கூடாது.. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம்’ என தனது பிறந்தநாள் உரையில் விசிக தலைவர் திருமாவளவன் பேசியிருப்பது கவனம்பெற்றுள்ளது.

மநீம தலைவர் கமல்ஹாசன்

விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் தொல்.திருமாவளவனின் பிறந்தநாளை தமிழர் எழுச்சி நாளாக கொண்டாடுகிறது அக்கட்சி. அந்த வகையில் சென்னை காமராஜர் அரங்கத்தில் திருமாவளவனின் 64-வது பிறந்தநாள் விழா, ஆகஸ்ட் 16-ம் தேதி மாலை 5 மணிக்கு தொடங்கி அவரது பிறந்தநாளான ஆகஸ்ட் 17-ம் தேதி அதிகாலை 4.30 மணிவரை நடைபெற்றது. பேச்சாளருமும் தமிழக அரசின் பாடநூல் கழகத் தலைவருமான திண்டுக்கல் லியோனி, அமைச்சர் சேகர்பாபு, மக்கள் நீதி மய்யக் கட்சித் தலைவர் கமல்ஹாசன், ஓய்வுபெற்ற ஐ.பி.எஸ் வனிதா, இயக்குநர்கள் பாக்யராஜ், லஷ்மி ராமகிருஷ்ணனன் உள்ளிட்ட பல்துறை சார்ந்த ஆளுமைகள் பங்கேற்று வாழ்த்தினர். ‘மதச்சார்பின்மை காப்போம்’ எனும் தலைப்பில் கவியரங்கமும், ஊடகவியலாளர்களின் கலந்துரையாடலும் நடைபெற்றன. விழாவில் பேசிய கமல்ஹாசன் “எனது முதல் எதிரி சாதிதான், திருமாவளவன் உருவெடுத்த பிறகுதான் ஒடுக்கப்பட்ட உழைக்கும் மக்களுக்கு உண்மையான விடுதலை கிடைப்பதாக நாம் நினைக்கிறோம்” என பாராட்டிப் பேசினார்.

காமராஜர் அரங்கம்

இந்நிகழ்வை வி.சி.க துணைப் பொதுச்செயலாளர் வன்னியரசு ஒருங்கிணைத்த நிலையில், வி.சி.க பொதுச்செயலாளர் சிந்தனைச் செல்வன், எம்.எல்.ஏ-க்கள் பனையூர் பாபு, ஆளூர் ஷாநவாஸ், எஸ்.எஸ் பாலாஜி உள்ளிட்ட முன்னணி நிர்வாகிகள் பலரும் முன்னின்று நடத்தினர்.

பிறந்தநாள் உரையாற்றிய திருமாவளவன் “தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் தி.மு.க அரசை எதிர்த்து நாம் போராடவில்லை என விமர்சிக்கிறார்கள். 5-வது நாளே போராட்டக் களத்துக்கு நேரடியாக சென்று 6-வது நாளே முதல்வரைச் சந்தித்து கோரிக்கைகள் குறித்துப் பேசினேன்.

சேகர்பாபு

போராட்டம் நடந்த 13 நாளும் அமைச்சர்களுடனும், போராட்டக் குழுவுடனும் பேசிக் கொண்டுதான் இருந்தேன். தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் போராட்டக் குழுவினரின் கோரிக்கைகளை நாம் ஆதரிக்கிற அதே நேரத்தில், குப்பை அள்ளும் தொழிலை நிரந்தரப்படுத்தி அதையே நீங்கள் காலம் முழுக்க செய்து கொண்டிருங்கள் எனச் சொல்வது எந்த வகையிலும் ஏற்புடையதல்ல. குப்பை அள்ளும் தொழிலிருந்து அவர்கள் மீள வேண்டும் என்பதுதான் நம்முடைய போராட்டம். ‘பணி நிரந்திரம் செய்யுங்கள்’ என்பது குப்பையை அள்ளுபவனே அள்ளட்டும் என்கிற கருத்துக்கு வலுசேர்ப்பதாக இருக்கிறது. ‘பணி நிரந்தரம் செய்யக் கூடாது’ என்பதுதான் சரியான கருத்து. அதிலிருந்து அவர்களை மீட்பதுதான் சமூகநீதி” என்றார் அழுத்தமாக.

தொடர்ந்து பேசியவர்கள் “தலித் பிரச்னைகள் என்றால் திருமாவளவன்தான் பேச வேண்டும் என்பதே சாதிப் புத்தி, வேங்கைவயலுக்கு உள்ளிட்ட பிரச்னைகளுக்கு அ.தி.மு.க உள்ளிட்ட மற்ற அரசியல் கட்சிகளுக்கு பொறுப்பில்லையா.. தலித் பிரச்னைகளை மக்கள் பிரச்னையாக கருதி அனைவரும் பேச வேண்டும். தி.மு.க, கம்யூனிஸ்ட் கட்சிகள் என அனைவருக்கும் அதில் பொறுப்பிருக்கிறது.

திருமாவளவன்

தேர்தல் நேரத்தில் நாம் எடுக்கிற முடிவுகள் எதுவாகவும் இருக்கட்டும் ஆனால் அந்த முடிவும்கூட சமூகநீதிக்கு ஆபத்து ஏற்படாத வகையில் இருக்க வேண்டும் என்ற தெளிவு நம்மிடம் உண்டு.” என்றார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *