• August 17, 2025
  • NewsEditor
  • 0

தமிழ் இசை உலகிற்கு இன்றைய தேதியில் பல இளம் இசைக்கலைஞர்கள் பெரும் பங்காற்றி வருகிறார்கள். அதில் லிடியன் நாதஸ்வரத்திற்கு மிக முக்கியமான இடமுண்டு.

இந்த இளம் வயதிலேயே உலக அரங்குகளில் தூள் கிளப்பி வருகிறார். இப்போது பெரும் உழைப்பைச் செலுத்தி ‘குறளிசைக்காவியம்’ என்ற தலைப்பில் 1330 திருக்குறளையும் அதன் பொருளோடு பாடலாகத் தயார் செய்திருக்கிறார்.

அப்படி அவர் தயார் செய்திருக்கும் இந்த ஆல்பத்தின் 33 நிமிடத்தை மட்டும் பிரத்யேகமாக சென்னை பிரசாத் லேப்பில் காட்சிப்படுத்தினார்கள்.

திரைத்துறையினர் பலரும் இந்த நிகழ்வில் கலந்துகொண்டு லிடியனையும் அவருடைய சகோதரி அமிர்தவர்ஷினியையும் வாழ்த்திப் பேசினார்கள்.

உலகத்தின் மிகப்பெரிய இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்று

பேசத் தொடங்கிய லிடியன் நாதஸ்வரம், “மிகவும் முக்கியமான வேலையைச் செய்து முடித்திருக்கிறோம். தமிழ் மொழியின் தலைசிறந்த நூலான திருக்குறளை மையப்படுத்தி இந்தப் புராஜெக்டைச் செய்திருப்பதில் மகிழ்ச்சியும், பெருமையும் அடைகிறோம்.

நிறைய தமிழறிஞர்கள் திருக்குறளுக்கு பொருள் எழுதியிருக்கிறார்கள். ஆனால், பெரும்பான்மையான மக்களுக்கு திருக்குறளின் முழுமையான பொருள் சென்று சேரவில்லை. அதைச் சரியாகக் கொண்டுபோய் மக்களிடம் சேர்க்க வேண்டும் என்பதுதான் எங்களுடைய நோக்கம்.

இந்தப் புராஜெக்டிற்காக திருக்குறளுக்கு சக்திவாசன் என்பவர் உரை எழுதிக் கொடுத்திருக்கிறார். 2014-ம் ஆண்டின் முடிவில்தான் இதனை நாங்கள் தொடங்கினோம். அப்போது என்னுடைய அக்கா அமிர்தவர்ஷினிக்கு 12 வயது.

லிடியன் நாதஸ்வரம்
லிடியன் நாதஸ்வரம்

அப்போது எனக்கு 9 வயது. அறம், பொருள், இன்பம் என முப்பாலின் கருத்துக்களையும் தெளிவாகப் புரிந்து அதை முதிர்ச்சியுடன் அணுக வேண்டும் என்பதற்காக அப்போது அதை நிறுத்திவிட்டோம்.

சொல்லப்போனால், அந்த நேரத்திலேயே என்னுடைய சகோதரி 400 குறள்களுக்கு டியூன் செய்து முடித்துவிட்டார். பிறகு 10 வருட இடைவெளிக்குப் பிறகு நாங்கள் அதைத் தொடங்கியிருக்கிறோம்.

அதற்கிடைப்பட்ட நேரத்தில் நானும் என் சகோதரியும் பல விஷயங்களைக் கற்றுக்கொண்டோம். கிட்டத்தட்ட 35 புதிய இசைக் கருவிகளை நான் இசைக்கக் கற்றுக்கொண்டேன். நமக்குப் பல விஷயங்களைச் சொல்லித்தரும் திருக்குறளை வெவ்வேறு இசை வகைகளில் கொடுத்திட வேண்டும் எனத் திட்டமிட்டுச் செய்திருக்கிறோம்.

இந்தப் புராஜெக்டில் மொத்தமாக 1330 பாடல்கள் இருக்கின்றன. உலகத்தின் மிகப்பெரிய இசை ஆல்பங்களில் இதுவும் ஒன்றாக இருக்கும்,” என்றார்.

இவரைத் தொடர்ந்து மேடையில் பேசிய லிடியனின் சகோதரி அமிர்தவர்ஷினி, “நான் இந்த ஆல்பத்திற்கு மெலடி மட்டும் கம்போஸ் செய்திருக்கிறேன். என்னுடையது சிறிய பங்களிப்புதான்.

லிடியன் இந்தப் புராஜெக்டிற்காக பெரும் உழைப்பைக் கொடுத்திருக்கிறார். எங்களது வீட்டில் எப்போதும் லிடியனைச் சுற்றி குறைந்தது 50 இசைக் கருவிகளாவது இருக்கும்.

இந்த ஆல்பத்திற்காக மொத்தமாக 1000 பின்னணிப் பாடகர்களை நாங்கள் பயன்படுத்தியிருக்கிறோம்.

பாடகர்களிடம் வரும் மெயில்களைக் கவனிப்பதில் தொடங்கி, இந்தப் புராஜெக்ட் தொடர்பாக ஒவ்வொருவருக்கும் சலிப்பின்றி விளக்கம் கொடுப்பது வரை என்னுடைய தாயாரும் இந்த ஆல்பத்திற்கு பெரும் உதவியாக இருந்தார்,” என்றார் உற்சாகத்துடன்.

இந்த நிகழ்வில் லிடியனையும் அவருடைய சகோதரியையும் வாழ்த்திப் பேசிய நடிகர் சிவக்குமார், “மு.வ, கலைஞர், சாலமன் பாப்பையா எனப் பலரும் திருக்குறளுக்கு உரை எழுதியிருக்கிறார்கள்.

லிடியனின் இந்த ஆல்பத்திற்காக திருக்குறள் உரை எழுதியிருக்கும் சக்திவாசனுக்கு என் பெரும் வாழ்த்துகள். இங்கு இருக்கும் 90 சதவீதம் பேருக்கு திருக்குறளின் பொருள் தெரியாது. அதனை அனைவருக்கும் எடுத்துரைக்கும் வகையில் நீங்கள் உரை எழுதியிருக்கிறீர்கள்.

திருக்குறளை அழகான பாடல்களாக விரித்திருக்கும் லிடியனுக்கும் அவருடைய சகோதரி அமிர்தவர்ஷினிக்கும் என்னுடைய வாழ்த்துகள்.

Sivakumar
Sivakumar

நீங்கள் இருவருமே தெய்வப் பிறவிகள்! உலகத்திலேயே இவர்கள் மட்டும்தான் 1330 திருக்குறளையும் வெவ்வேறு பாடகர்களை வைத்து ரெக்கார்ட் செய்திருப்பார்கள்.

லிடியன், அவருடைய 13 வயதிலேயே உலகம் முழுக்க கவனம் ஈர்த்துச் சரித்திரச் சாதனைப் படைத்தவர். அவர் தமிழ்நாட்டில் பிறந்தது அவர் செய்த பாவம். அமெரிக்காவில் லிடியன் பிறந்திருந்தால் கடவுளாக வைத்து கொண்டாடியிருப்பார்கள்.

நாம் இன்னும் அவரைக் கொண்டாடாமல் இருக்கிறோம். இதைவிடப் பள்ளிக் குழந்தைகளுக்கு திருக்குறளை எளிமையாக விளக்க முடியாது,” என்றார்.

இயக்குநர் மற்றும் நடிகர் எஸ்.ஏ.சி பேசும்போது, “லிடியனும், அமிர்தவர்ஷினியும் செய்திருப்பது சாதாரண முயற்சி கிடையாது. இது பெரும் சாதனை.

இந்தச் சாதனைக்கு முன்னால் நாமெல்லாம் ஒரு துரும்பு மாதிரிதான் இருப்போம். உங்களுடைய தந்தை உங்களைச் செதுக்கியிருக்கிறார். அமெரிக்காவில் பெரும் பாராட்டுகளை அள்ளியவர் லிடியன்.

எஸ்.ஏ.சந்திரசேகர்
எஸ்.ஏ.சந்திரசேகர்

சிவக்குமார் சார் சொன்னதுபோல, இதுவே லிடியன் வெளிநாட்டில் இருந்திருந்தால் அவரைக் கொண்டாடியிருப்பார்கள்.

இது நம் நாடு, அப்படித்தான்! பிள்ளைகளின் வளர்ச்சிக்காக அதிகளவில் அவர்களுடைய தந்தை வர்ஷன் உழைத்திருக்கிறார். அவருக்கு ஹாட்ஸ் ஆஃப்!” எனப் பேசினார்.

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *