
திருச்சி: தமிழகத்தில் அரசு ஊழியர்கள், ஆசிரியர்கள் மற்றும் அரசு சார்ந்த பொதுத்துறை நிறுவனங்களில் மொத்தம் 10.50 லட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இவர்களது கோரிக்கைகளில் முதன்மையானது பழைய ஓய்வூதியத் திட்டத்தை அமல்படுத்துவதாகும்.
அரசு ஊழியர்கள், அவர்களது குடும்பத்தினர் என சுமார் 40 லட்சம் வாக்காளர்கள் உள்ள நிலையில், பழைய ஓய்வூதியத் திட்டம் குறித்த கோரிக்கை சட்டப்பேரவைத் தேர்தலில் முக்கியப் பங்கு வகிக்கும் என்று கூறப்படுகிறது. இதுகுறித்து சிபிஎஸ் ஒழிப்பு இயக்க தலைமை ஒருங்கிணைப்பாளர் பிரெடெரிக் எங்கெல்ஸ் ‘இந்து தமிழ் திசை’ செய்தியாளரிடம் கூறியதாவது: தமிழக அரசில் காலமுறை ஊதியத்தில் பணிபுரியும் அரசு ஊழியர், ஆசிரியர்களில் 1,98,331 பேர் பழைய ஓய்வூதிய திட்டத்திலும், 6,24,140 பேர் புதிய ஓய்வூதியதிட்டத்திலும் உள்ளனர்.