
சென்னை: அமெரிக்காவின் வரிவிதிப்பு நடவடிக்கையால் தமிழக உற்பத்தி துறை கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது. லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் அச்சுறுத்தலுக்கு உள்ளாகியிருக்கிறது. இந்த இக்கட்டான சூழ்நிலையை சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்கவும் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் வலியுறுத்தியுள்ளார்.
இதுதொடர்பாக பிரதமர் மோடிக்கு முதல்வர் ஸ்டாலின் நேற்று எழுதியுள்ள கடிதத்தில் கூறியிருப்பதாவது: இந்தியா – அமெரிக்கா இடையே, இரு நாடுகளுக்கும் பயனளிக்கக்கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு மத்திய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளை பாராட்டுகிறேன். தேசிய நலன்களை பாதுகாப்பதற்கான மத்திய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அதேநேரம், அமெரிக்காவின் 25 சதவீத வரிவிதிப்பு மற்றும் அதன் தொடர்ச்சியாக 50 சதவீதமாக வரி அதிகரிப்பு காரணமாக கடும் தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழகத்தில் ஏற்பட்டுள்ள கவலை அளிக்கும் பிரச்சினை குறித்து தங்கள் கவனத்துக்கு கொண்டு வருகிறேன்.