• August 16, 2025
  • NewsEditor
  • 0

திண்டுக்கல் மாவட்டம், ஆத்தூர் சட்டமன்ற உறுப்பினரும் ஊரக வளர்ச்சிதுறை அமைச்சருமான ஐ.பெரியசாமியின் வீட்டில் காலை 7.30 மணிக்கு அமலாக்கதுறையினர் சென்று செக்யூரிட்டி கார்டுகளை வெளியேற்றி விட்டு சோதனையில் ஈடுபட்டனர். இவரது வீட்டில் மட்டுமல்லாமல் சீலப்பாடியில் உள்ள அவரது மகன் ஐ.பி.செந்தில்குமார் வீடு, மகள் இந்திராணி வீடு மற்றும் அமைச்சர் பெரியசாமிக்கு சொந்தமாக வத்தலகுண்டு சாலையில் உள்ள அலமேலு மற்றும் இருளப்பா மில்களிலும் சோதனை நடைபெற்றது.

அமைச்சர் பெரியசாமியின் இல்லம்

தகவலறிந்து வந்த அமைச்சரின் ஆதரவாளர்கள் 100க்கும் மேற்பட்டோர் வீட்டின் முன்பு கூடினர். 11 மணி அளவில் அமைச்சர் பெரியசாமியின் வீட்டிற்கு கூடுதலாக சி.ஆர்.பி.எஃப் வீரர்களும் வந்ததால் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. மதிய நேரத்தில் அங்கு கூடியிருந்தவர்களுக்கு தயிர் சாதம், லெமன் சாதம், டீ போன்றவை அவருடைய ஆதரவாளர்களால் வழங்கபட்டது. மாலை 4 மணி அளவில் பொறுமையிழந்த தொண்டர்கள் கொந்தளிக்க தொடங்கினர். அதில் ஒருவர் ‘ அமைச்சர் ஐ,பெரியசாமி வாழ்க’ என்று கோஷம் போட்டபடி பெட்ரோல் ஊற்றி கொண்டு தற்கொலை செய்ய முயற்சித்தார். போலீசார் அவரை தடுத்தி நிறுத்தி அனுப்பி வைத்தனர்.

தீக்குளிக்க முயற்சி செய்த நபர்

நிலைமை கட்டுங்கடாமல் செல்லும் நிலையில் ஐ.பெரியசாமி வீட்டிலிருந்து வெளியே வந்து தொண்டர்களிடம் கையசைத்து அமைதியாக இருங்கள் என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்று விட்டார். அவரை பார்த்த தொண்டர்கள் ஆரவாரமிட்டனர். இந்த நிலையில் 11 மணி நேரம் நடைபெற்ற சோதனை நிறைவடைந்து மாலை 6.30 மணி அளவில் அமலாக்கதுறையினர் ஒரு சூட்கேஸ், நீல நிற பேக்கை எடுத்து கொண்டு அமைச்சர் வீட்டிலிருந்து கிளம்பி சென்றனர்.

அமலாக்கதுறையினர் கிளம்பி செல்கின்றனர்

அமலாக்கத்துறையினர் கிளம்பி செல்லும் போது எல்லோருடனும் கைகுலுக்கி அதிகாரிகளை சிரித்தபடி வழியனுப்பிவைத்தார் ஐ.பெரியசாமி. அவர்கள் சென்றதையடுத்து ஐ.பெரியசாமி வெளியே வந்ததும் தொண்டர்கள் ஆராவாரம் செய்து ‘ அமைச்சர் ஐ.பெரியசாமி வாழ்க’ என்று முழக்கங்களை எழுப்பினர். இதை தொடர்ந்து பேசிய அமைச்சர் ஐ. பெரியசாமி ‘ எல்லோரும் வீட்டிற்கு பத்திரமாக செல்லுங்கள் நாளை உங்களை சந்திக்கிறேன்’ என்று சொல்லிவிட்டு வீட்டிற்குள் சென்றுவிட்டார்.

சட்டமன்ற உறுப்பினர் ஐ.பி செந்தில்குமார் வீட்டில் தொடரும் சோதனை.

உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி ஐ.பெரியசாமியின் வீட்டிற்கு வந்தார். ஐ.பெரியசாமியின் மகனும் பழனி சட்டமன்ற உறுப்பினருமான ஐ.பி. செந்தில்குமார் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை 11 மணி நேரங்களுக்கும் மேலாக தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *