
இந்தியாவின் 79-வது சுதந்திர தினவிழா நேற்று கொண்டாடப்பட்டது. டெல்லி செங்கோட்டையில் கொடியேற்றிவைத்து பிரதமர் மோடி உரையாற்றினார். அவர் பிரதமராகப் பதவியேற்றதிலிருந்து பேசிய உரைகளில் நேற்று பேசிய உரைதான் (சுமார் 105 நிமிடங்கள்) நீளமானது. ஏற்கெனவே பா.ஜ.க-வுக்கும் ஆர்.எஸ்.எஸ் அமைப்புக்கும் கருத்துவேறுபாடு நிலவுவதாக தகவல்கள் வெளியானது. சமீபத்தில் கூட ஆர்.எஸ்.எஸ் தலைவர் மோகன் பாகவத் 75 வயதான தலைவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பது எழுதப்படாத விதியாகவே இருக்கிறது என குறிப்பிட்டிருந்தார்.
இந்த ஆண்டு செப்டம்பர் 17 அன்று மோடி 75-வது பிறந்தநாளை கொண்டாடவிருக்கிறார். எனவே ஆர்.எஸ்.எஸ் தலைவரின் பேச்சு பிரதமர் மோடியை குறிவைத்து பேசபட்டதாக சலசலப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், சுதந்திர தின உரையில் வலதுசாரி அமைப்பான ஆர்.எஸ்.எஸ்-ஸை பிரதமர் மோடி புகழ்ந்து பேசினார். அவரின் உரையில், “இந்த அக்டோபரில் விஜயதசமி அன்று ஆர்.எஸ்.எஸ் அதன் நூற்றாண்டு விழாவைக் கொண்டாடும்.
கடந்த 100 ஆண்டுகளாக, ஆர்.எஸ்.எஸ் சுயம்சேவகர் (தன்னார்வலர்கள்) ‘மாதா பூமி’ (தாய்நாடு) நலனுக்காக ‘வியாக்தி நிர்மாணம்’ (நடத்தை மேம்பாடு) ‘ராஷ்டிர நிர்மாணம்’ (தேசக் கட்டுமானம்) ஆகியவற்றின் உறுதியை நிறைவேற்ற தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்து வருகின்றனர். இந்த ஆர்.எஸ்.எஸ் நூற்றாண்டு பயணம் மிகவும் பெருமைமிக்க, புகழ்மிக்க பயணம்” என்றார்.
பிரதமர் மோடியின் இந்தக் கருத்துக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடுமையான எதிர்ப்பை பதிவு செய்திருக்கின்றனர்.
கேரள முதல்வர் பினராயி விஜயன் வெளியிட்டிருக்கும் அறிக்கையில், “மகாத்மா காந்தி படுகொலைக்குப் பிறகு தடை செய்யப்பட்ட ஒரு வலதுசாரி அமைப்பிற்கு சுதந்திர போராட்டத்தின் பெருமையை உரிமையாக்கும் முயற்சியாக, பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்துரைத்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்வதற்கு சுதந்திர தின உரையை பிரதமர் பயன்படுத்துவது சுதந்திர தினத்தையே அவமதிப்பதற்கு சமம்.
மோடியின் நடவடிக்கை வரலாற்றை மறுக்கும், மாற்றும் செயலாகும். இதுபோன்ற அபத்தமான நடவடிக்கைகள் மூலம் ‘பிளவுபடுத்தும் அரசியல்’ என்ற விஷ வரலாற்றைக் கொண்ட ஆர்.எஸ்.எஸ். அமைப்பின் செயல்களை மூடிமறைக்க முடியாது.

பிரதமர் மோடி ஆர்.எஸ்.எஸ். அமைப்பை புகழ்ந்துரைப்பதும், மத்திய பெட்ரோலிய அமைச்சகத்தின் சுதந்திர தின வாழ்த்து அட்டையில் மகாத்மா காந்தியின் படத்திற்கு மேல் சாவர்க்கரின் படத்தை இடம்பெற வைப்பதும் பெரிய சதித்திட்டத்தின் ஒரு பகுதி என்பது தெரிகிறது.
ஆர்.எஸ்.எஸ் அமைப்பு வெறுப்பு, வகுப்புவாதம் மற்றும் கலவரங்களின் அழுக்கு சுமையை சுமந்து கொண்டிருக்கிறது. மனித அன்பு மற்றும் பரஸ்பர உறவின் வரலாற்றைப் புதைத்து, அதை வெறுப்பாக மாற்ற முயற்சிக்கும் எந்தவொரு நடவடிக்கையையும் நாட்டு மக்கள் ஒற்றுமையுடன் எதிர்கொள்ள வேண்டும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.