
உத்தரப்பிரதேச சட்டமன்ற வளாகத்திற்குள் அமைச்சர் சஞ்சய் நிஷாத் தனது காரை வாகனங்களை நிறுத்த தடை விதிக்கப்பட்டு இருந்த இடத்தில் நிறுத்தி இருந்தார். அவர் காரை வழக்கமான வாகனங்கள் நிறுத்தும் இடத்தில் நிறுத்தாமல் போக்குவரத்திற்கு இடையூராக நிறுத்தி இருந்தார். இதனால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.
காரை நிறுத்தி விட்டு அமைச்சரின் டிரைவர் எங்கேயோ சென்றுவிட்டார். போக்குவரத்து காவலர்கள் கார் டிரைவரை தேடினர். ஆனால் டிரைவரை காணவில்லை. இதனால் போக்குவரத்திற்கு இடையூறாக நின்ற அந்த காரை அங்கிருந்து அப்புறப்படுத்த வேண்டிய இக்கட்டாய சூழ்நிலையில் இருந்தனர். இதையடுத்து அங்கு உடனடியாக கிரேன் ஒன்று வரவழைக்கப்பட்டது.
அந்த கிரேன் அப்படியே அமைச்சரின் காரை அந்த இடத்தில் இருந்து இழுத்துச்சென்று போக்குவரத்திற்கு இடையூறு இல்லாத இடத்தில் நிறுத்தினர். காரை அங்கிருந்து இழுத்துச்செல்லும் வரை கார் டிரைவர் அங்கு வந்து சேரவில்லை. அமைச்சரின் காரை கிரேன் மூலம் இழுத்துச்சென்ற காட்சி சமூக வலைத்தளத்தில் வைரலாக பரவியது. சஞ்சய் நிஷாத் கடந்த 2022ம் ஆண்டில் இருந்து உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் மீன்வளத்துறை அமைச்சராகவும், நிஷாத் கட்சி தலைவராகவும் இருக்கிறார்.
யோகியை புகழ்ந்த எம்.எல்.ஏ.கட்சியிலிருந்து நீக்கம்
உத்தரப்பிரதேச சட்டமன்றத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத்தை புகழ்ந்து பேசிய சமாஜ்வாடி கட்சி எம்.எல்.ஏ.பூஜாவை அக்கட்சி தலைவர் அகிலேஷ் யாதவ் கட்சியில் இருந்து நீக்கி உத்தரவிட்டுள்ளார். பூஜா சட்டமன்றத்தில், தனது கணவர் படுகொலை செய்யப்பட்டதற்கு முதல்வர் யோகி ஆதித்யநாத் நீதி வழங்கி இருப்பதாகவும், கிரிமினல்கள் விசயத்தில் பாரபட்சம் இல்லாமல் நடந்து கொள்வதாகவும் குறிப்பிட்டு இருந்தார். அவர் முதல்வரை பாராட்டிய சில மணி நேரத்தில் அவரை கட்சியில் இருந்து நீக்கி இருப்பதாக அகிலேஷ் யாதவ் தெரிவித்துள்ளார்.
2005ம் ஆண்டு எம்.எல்.ஏ ராஜு படுகொலை செய்யப்பட்டார். அவர் படுகொலை செய்யப்படுவதற்கு முன்பு பூஜாவை திருமணம் செய்திருந்தார். இப்படுகொலையில் ஈடுபட்டவர்களை உத்தரப்பிரதேச போலீஸார் என்கவுன்டரில் செய்தது குறிப்பிடத்தக்கது.