
இந்தியர் ஒருவர் தனது அமெரிக்க மனைவியிடம், அவரைத் திருமணம் செய்துகொண்டதற்கான காரணத்தை விளக்கும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகிக் கொண்டிருக்கிறது.
அந்த வீடியோவில் வரும் கணவன் மனைவியின் பெயர் அனிகேத், கேண்டஸ் கர்னே. அவர்கள் தங்களின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருக்கும் அந்த வீடியோவில், “அனிகேத், நீ ஏன் என்னைத் திருமணம் செய்தாய்” என்று கேண்டஸ் கர்னே தன் கணவரிடம் கேட்டார்.
அதற்கு அனிகேத், “உன்னை முதன்முதலில் சந்தித்தபோது, நீ என்ன செய்கிறாய் என்பது பற்றி கூறியவற்றால் நான் மிகவும் ஈர்க்கப்பட்டேன். நீ ஆசிரியை என்பதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.
அன்று இரவு நீ கூறிய அனைத்தும் என்னை ஈர்த்தது. உன்னுடன் இருக்கும்போது மிக இனிமையாக உணர்ந்தேன்.
உன் குடும்பத்தினரையும் எனக்குப் பிடிக்கும். அவர்களுடன் பேசி அவர்களை அறிந்தபோது நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன்.
எனக்கு மிகவும் நட்புரீதியான சூழல் கிடைத்தது. இது ஒரு நல்ல குடும்பம் என்று நினைத்தேன்.
நான் ஒரு நல்ல குடும்பத்துடன் இருக்க விரும்புகிறேன். அதனால்கூட உன்னைத் திருமணம் செய்திருக்கலாம்” என்று கூறினார்.
வேகமாகப் பரவிவரும் இந்த வீடியோ இணையதளவாசிகள் பலரையும் கவர்ந்திருக்கிறது. அதில் இணையதளவாசி ஒருவர் இந்த வீடியோவுக்கு, “இந்தியாவில், திருமணம் என்பது தனிநபர்களை விட குடும்ப உறவுகளைப் பற்றியது” என்று கமெண்ட்டில் தெரிவித்திருக்கிறார்.
அதேபோல் இன்னொருவர், “நான் இந்தியன். உண்மையைச் சொன்னால், நீங்கள் இருவரும் ஒன்றாக அழகாக இருக்கிறீர்கள். கடவுள் உங்கள் இருவரையும் ஆசீர்வதிப்பார்” என்று கமெண்ட்டில் வாழ்த்தியிருக்கிறார்.