
`வேட்டையன்’ திரைப்படத்திற்குப் பிறகு ரஜினிகாந்த் நடிப்பில் `கூலி’ திரைப்படம் வெளியாகி இருக்கிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கி இருக்கும் இந்தப் படத்தில் நாகர்ஜுனா, சத்யராஜ், உபேந்திரா, செளபின் ஷாஹிர், ஸ்ருதி ஹாசன் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்திருக்கிறார்கள்.
அனிருத் இந்தப் படத்திற்கு இசையமைத்திருக்கிறார். தவிர ரஜினிகாந்த் தனது சினிமா பயணத்தில் 50 ஆண்டுகளை நிறைவு செய்கிறார்.
பலரும் ரஜினிகாந்த்திற்கு வாழ்த்துகளைத் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வரும், நடிகருமான பவன் கல்யாண் ரஜினிகாந்த்தின் 50 ஆண்டுக்கால சினிமா பயணத்திற்கு வாழ்த்துத் தெரிவித்திருக்கிறார்.
“ ‘சூப்பர் ஸ்டார் ரஜினி’ என்ற பட்டம் வெள்ளித்திரையில் தோன்றும்போது திரை அரங்கமே அதிரும் என்பதை சென்னையில் பலமுறை பார்த்திருக்கிறேன். தலைமுறைகள் மாறினாலும், இந்த மகிழ்ச்சி குறையவில்லை.
இவ்வளவு பெரிய ரசிகர் பட்டாளத்தை வென்ற உச்ச நாயகன் திரு.ரஜினிகாந்த் அவர்கள். ஒரு நடிகராக ஐந்து தசாப்தங்கள் நிறைவு செய்துள்ளார் என்பது மகிழ்ச்சியை அளிக்கிறது. தனது திரைப்பட வாழ்க்கையில் பொன்விழாவைக் கொண்டாடும் சூப்பர் ஸ்டார் திரு. ரஜினிகாந்த் அவர்களுக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்.

நடிகராக அவரது பயணம் பலருக்கு உத்வேகமாக இருந்து வருகிறது. அவர் வில்லனாக நடித்தாலும் சரி, ஹீரோவாக நடித்தாலும் சரி, திரு. ரஜினிகாந்த் அவர்கள் தனக்கென உரிய பாணியில் நடித்து பார்வையாளர்கள் மனதில் அழியாத முத்திரையைப் பதித்துள்ளார்.
அவர் தனது நடை, வசனங்கள் மற்றும் சைகைகளில் தனித்துவத்தைக் காட்டுகிறார். புதிய தலைமுறையிலும் திரு. ரஜினிகாந்த் அவர்களின் ஸ்டைலுக்கு ரசிகர்கள் உள்ளனர். ஒரு நடிகராக தனது வாழ்க்கையின் உச்சத்தை எட்டிய திரு. ரஜினிகாந்த், மகாவதார் பாபாஜியின் பக்தராக ஆன்மிக விஷயங்களிலும், யோகா பயிற்சியில் சிறப்பு கவனம் செலுத்துகிறார், இது அவரது பக்தி மற்றும் மத நம்பிக்கையை காட்டுகிறது.

ஒரு நடிகராக தனது பொன் விழாவைக் கொண்டாடும் திரு. ரஜினிகாந்த், இன்னும் பல வேடங்களில் நடித்து ரசிகர்களை மகிழ்விப்பார் என்று நம்புகிறேன். திரு.ரஜினிகாந்திற்கு முழுமையான ஆரோக்கியத்தையும், மகிழ்ச்சியையும் வழங்க கடவுளிடம் பிரார்த்திக்கிறேன்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.
சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்
https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR
சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…
உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…