
சென்னை: “‘வாக்கு திருட்டு’ என்ற சட்டவிரோத பரிமாற்றத்தை திசை திருப்ப அமைச்சர் ஐ.பெரியசாமி தொடர்புடைய இடங்களில் ஒன்றிய பாஜக அரசின் எடுபிடி அமலாக்கத் துறை சோதனை என்ற பெயரில் அத்துமீறுகிறது. திமுகவினர் மோடிக்கும் அஞ்ச மாட்டார்கள், ஈடி-க்கும் அஞ்சமாட்டார்கள்” என திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதி தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் வெளிட்டுள்ள அறிக்கையில், “ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் ஐ.பெரியசாமிக்கு தொடர்புடைய இடங்களில் அமலாக்கத் துறை அதிகாரிகள் சோதனை நடத்தியிருக்கிறார்கள். 2006 – 2011 திமுக ஆட்சியில் வீட்டு வசதி வாரியத் துறை அமைச்சராக ஐ.பெரியசாமி இருந்தபோது வருமானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்தாக சொல்லி, பழிவாங்கும் நடவடிக்கையாக அடுத்து வந்த அதிமுக ஆட்சியில் வழக்கு போடப்பட்டது.