
சென்னை: இந்தியப் பொருட்களுக்கு அமெரிக்க அரசு விதித்துள்ள கூடுதல் இறக்குமதி வரி காரணமாக தமிழகம் அதிக பாதிப்புகளை எதிர்கொண்டு வருவதாகத் தெரிவித்துள்ள முதல்வர் மு.க. ஸ்டாலின், இதை கருத்தில் கொண்டு மத்திய அரசு தேவையான நடவடிக்கைகளை எடுக்க வேண்டும் என்று பிரதமர் நரேந்திர மோடியை கேட்டுக்கொண்டுள்ளார்.
இது தொடர்பாக பிரதமர் நரேந்திர மோடிக்கு, முதல்வர் மு.க. ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார். அதன் விவரம்: இந்தியாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையில், இரு நாடுகளுக்கும் பயனளிக்கக் கூடிய வர்த்தக ஒப்பந்தத்தை எட்டுவதற்கு ஒன்றிய அரசு மேற்கொண்டுள்ள முயற்சிகளைப் பாராட்டுகிறேன். தேசிய நலன்களைப் பாதுகாப்பதற்கான ஒன்றிய அரசின் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறேன். அமெரிக்க அரசு விதித்துள்ள தற்போதைய 25% வரி மற்றும் அதன் தொடர்ச்சியாக 50% வரி அதிகரிப்பு காரணமாக கடுமையான தாக்கங்களை எதிர்கொள்வதால், தமிழ்நாட்டில் ஏற்பட்டிருக்கும் கவலை அளிக்கும் ஒரு பிரச்சனை தங்களின் கவனத்திற்குக் கொண்டுவர விரும்புகிறேன்.