• August 16, 2025
  • NewsEditor
  • 0

அமெரிக்க அதிபர் இந்தியா மீது விதித்துள்ள 50% வரியினால் அதிகம் பாதிக்கப்படும் மாநிலமாக தமிழ்நாடு இருக்கும் என்றும், இதனை சமாளிப்பதற்கான உடனடி நடவடிக்கைகளை மத்திய அரசு எடுக்க வேண்டுமென்றும் வலியுறுத்தி பிரதமருக்கு கடிதம் எழுதியுள்ளார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்.

MK Stalin கடிதம் சொல்வதென்ன?

தமிழ்நாடு அதிகம் பாதிக்கப்படும்

அமெரிக்கச் சந்தையைத் தமிழ்நாடு அதிகமாகச் சார்ந்திருப்பதால், இறக்குமதி வரியின் தாக்கம், இந்தியாவில் உள்ள மற்ற மாநிலங்களைவிடத் தமிழ்நாட்டில் அதிகமாக இருக்கும்.

Donald Trump

தமிழ்நாட்டில் ஜவுளித்துறை கிட்டத்தட்ட 75 லட்சம் பேர்களுக்கு வேலைவாய்ப்பு அளித்துள்ளது. 25% வரி மற்றும் முன்மொழியப்பட்டுள்ள 50% வரியின் காரணமாக, 30 லட்சம் பேர் வேலை இழக்கும் அபாயம் உள்ளது.

இந்த நெருக்கடியைத் தணிக்க, நமது ஏற்றுமதிப் போட்டித்தன்மைக்கு நீண்டகாலமாகத் தடையாக இருக்கும் கட்டமைப்புச் சிக்கல்களைத் தீர்ப்பது அவசியம்.

உடனடியாக தேவைப்படும் நடவடிக்கைகள்

இது தொடர்பாக, பாதிக்கப்பட்டுள்ள துறைகளைச் சேர்ந்த தொழில் அமைப்புகளுடன் நான் நடத்திய ஆலோசனைகளின் அடிப்படையில், ஜவுளித் துறைக்கு, மனிதரால் உருவாக்கப்பட்ட இழை மதிப்புச் சங்கிலிக்கான ஜிஎஸ்டி விகிதங்களில் உள்ள முரண்பாடுகளை நீக்கி, தலைகீழ் வரிக் கட்டமைப்பைச் சரிசெய்தல், முழுச் சங்கிலியையும் 5% ஜிஎஸ்டி அடுக்குக்குள் கொண்டு வருதல் மற்றும் அனைத்து வகையான பருத்திக்கும் இறக்குமதி வரியில் இருந்து விலக்கு அளித்தல் ஆகியவற்றில் துரித நடவடிக்கை தேவைப்படுகிறது.

ஜி.எஸ்.டி | GST

அவசரக் கடன் வரி உத்தரவாதத் திட்டத்தின்கீழ் (ECLGS) 30% பிணையமில்லாத கடன்களை 5% வட்டி மானியம் மற்றும் அசலைத் திருப்பிச் செலுத்துதலில் 2 ஆண்டு தற்காலிகத் தடையுடன் நீட்டித்தல், RoDTEP நன்மைகளை 5% ஆக உயர்த்துதல், நூல் உட்பட அனைத்து ஜவுளி ஏற்றுமதிகளுக்கும் முன் மற்றும் பின் கடனை நீட்டித்தல் ஆகியவை நமது ஏற்றுமதி போட்டித்தன்மையை வலுப்படுத்துவதற்கான பிற முக்கியக் காரணிகளாக முன்னிலைப்படுத்தப்பட்டுள்ளன.

இக்கட்டான சூழ்நிலையைக் கடக்கத் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பு வழங்கும்!

பணப்புழக்கத்தை மேம்படுத்தவும், செலவுச் சுமைகளைக் குறைக்கவும் சுங்கவரிகளால் பாதிக்கப்பட்ட அனைத்து ஏற்றுமதியாளர்களுக்கும் சிறப்பு வட்டி மானியத் திட்டத்தை அறிமுகப்படுத்துவதையும், அதிக சுங்கவரிச் சந்தை அபாயங்களை ஈடுகட்ட தடையற்ற வர்த்தக ஒப்பந்தங்கள் (FTAக்கள்) மற்றும் இருதரப்பு ஒப்பந்தங்களை விரைவுபடுத்துவதையும் ஒன்றிய அரசு பரிசீலிக்க வேண்டும்.

பிரச்சினையின் தீவிரத்தைக் கருத்தில் கொண்டு, கோவிட் பெருந்தொற்றுக் காலத்தில் செயல்படுத்தப்பட்டதைப் போன்று, அசலைத் திருப்பிச் செலுத்துவதில் சலுகை உள்ளிட்ட ஒரு சிறப்பு நிதி நிவாரணத் தொகுப்பு நமது ஏற்றுமதியாளர்களை ஆதரிக்க வேண்டியது அவசியம். பிரேசில் அரசு அந்நாட்டு ஏற்றுமதியாளர்களுக்கு வரி ஒத்திவைப்பு மற்றும் வரிச் சலுகைகளை அறிவித்துள்ளதைப் போன்று, இந்தியாவிலும் இதுபோன்ற ஒரு முயற்சியை எதிர்பார்க்கிறோம்.

இந்த இக்கட்டான சூழ்நிலையைச் சமாளிக்கவும், வர்த்தகத்தை மீட்டெடுக்கவும் ஒன்றிய அரசு மேற்கொள்ளும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் தமிழ்நாடு முழு ஒத்துழைப்பினை வழங்கும்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *