
காஞ்சி / செங்கை / திருவள்ளூர்: காஞ்சிபுரம், செங்கல்பட்டு திருவள்ளூர் மாவட்டங்களில் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. ஏகனாபுரம் கிராமத்தில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் பரந்தூர் விமான நிலையத்துக்கு எதிராக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
சுதந்திர தினத்தை முன்னிட்டு காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஊராட்சிகளிலும் கிராம சபைக் கூட்டம் நேற்று நடைபெற்றது. கீழம்பி ஊராட்சியில் நடைபெற்ற கிராம சபைக் கூட்டத்தில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார்.
இந்த ஊராட்சியில் 16 தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன. இதனைத் தொடர்ந்து தூய்மை பணியாளர்களுக்கு பொன்னாடை போர்த்தி கவுரவித்தார். பொதுமக்களிடம் இருந்தும் மனுக்களை பெற்றார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் செ.வெங்கடேஷ், காஞ்சிபுரம் ஒன்றிய குழுத்தலைவர் மலர்க்கொடி, மாவட்ட ஊராட்சி குழுத் துணைத்தலைவர் நித்தியா சுகுமார் உட்பட பலர் பங்கேற்றனர். இதனைத் தொடர்ந்து ஏகாம்பரநாதர் கோயிலில் சமபந்தி விருந்து நடைபெற்றது. இதில் ஆட்சியர் கலைச்செல்வி பங்கேற்றார்.