
இந்தியாவின் 79-வது சுதந்திர தினத்தை முன்னிட்டு, இந்திய பிரதமர் நரேந்திர மோடி செங்கோட்டையில் கொடி ஏற்றிவிட்டு, உரையாற்றினார்.
மோடியின் உரை
அந்த உரையின் இடையில், அவர் ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்தும் பேசியிருந்தார். அதாவது, “இந்தியா என்கிற தேசம் அரசாங்கத்தாலும், ஆட்சியில் அமர்ந்திருப்பவர்களாலும் மட்டும் உருவாகவில்லை.
அதில் கோடிக்கணக்கான மக்களின் உழைப்பும் உள்ளது. மக்கள் என்று குறிப்பிடுவதில் ஞானிகள், விஞ்ஞானிகள், ஆசிரியர்கள், விவசாயிகள், ராணுவ வீரர்கள், கூலித் தொழிலாளர்கள், தனிநபர்கள், அமைப்புகள் என அனைவரும் அடங்குவார்கள்.
100 ஆண்டுகளுக்கு முன்பு, ராஷ்ட்ரிய சுயம்சேவக் சங்கம் என்ற ஒரு அமைப்பு உருவானது என்பதை பெருமையுடன் குறிப்பிட விரும்புகிறேன். அந்த அமைப்பின் 100 ஆண்டுக்கால தேச சேவை என்பது பெருமைக்குரியது மற்றும் புகழ்பெற்றது” என்று பேசியிருந்தார்.
காங்கிரஸ் கருத்து
இந்தப் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் எம்.பி மாணிக்கம் தாகூர் தனது எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அதில், “1925-ம் ஆண்டு நிறுவப்பட்ட ஆர்.எஸ்.எஸ் நேரடியாக இந்திய விடுதலைப் போராட்டத்தில் எதுவும் செய்யவில்லை.
அது பிரிட்டிஷிற்கு எதிரான ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு இயக்கம் மற்றும் பிற பெரிய போராட்டங்களில் இருந்து தள்ளியே இருந்தது.
அந்த அமைப்பின் நிறுவனர் கே.பி. ஹெட்கேவார், 1925-ம் ஆண்டுக்கு முன்னர், காங்கிரஸின் போராட்டங்களில் கலந்துகொண்டிருந்தார்.
ஆனால், ஆர்.எஸ்.எஸ் நிறுவியதற்கு பின்பு, அவர், காலனியவாத சக்திகளை எதிர்ப்பதை விட்டு, ‘கலாச்சார தேசியவாதத்திற்கு’ மாற்றிவிட்டார்.

பிரிட்டிஷின் கோப்புகள், காங்கிரஸ் மற்றும் ஐ.என்.ஏகளை ஒப்பிடுகையில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பு அச்சுறுத்தல் இல்லாதது என்று குறிப்பிடுகிறது.
1942-ம் ஆண்டு வெள்ளையனே வெளியேறு போராட்டத்தின் போது கூட, ஆர்.எஸ்.எஸ்ஸின் அப்போதைய தலைவர் கோல்வால்கர், அதன் உறுப்பினர்களை அந்தப் போராட்டத்தில் கலந்துகொள்ள வேண்டாம் என்று அறிவுறுத்தி இருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ் எந்தவொரு சுதந்திர போராட்டத்திலும் கலந்துகொள்ளவில்லை என்று சர்தார் பட்டேலே குறிப்பிட்டிருக்கிறார்.
ஆர்.எஸ்.எஸ்ஸின் மரபு என்பது காலனியத்துவத்தை எதிர்த்து போராடுவது அல்ல. இந்தியர்கள் மத்தியில் வெறுப்பையும், பிரிவினையையும் உண்டாக்குவது ஆகும்.
இந்த வெறுப்பு சித்தாந்தை நம்மிடம் இருந்து மகாத்மா காந்தி தான் அகற்றினார்.
இருந்தும் பிரதமர் மோடி, 2025-ம் ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதி தனது ஓய்வில் இருந்து தப்பிக்கவும், ஆர்.எஸ்.எஸ்க்காக இதை பேசியுள்ளார்.

விடுதலை போராட்டத்தில் இருந்து விலகி இருந்த அமைப்பிற்காக, இந்தியாவின் உண்மையான விடுதலை போராட்ட வீரர்களின் நினைவுகளை அவமானப்படுத்துவது ஏற்றுக்கொள்ள முடியாது.
இந்தியாவின் விடுதலை என்பது புரட்சியாளர்கள், காங்கிரஸ் தலைமையிலான வெகுஜன இயக்கங்கள், ஐ.என்.ஏ வீரர்கள் மற்றும் கோடிக்கணக்கான சாதாரண குடிமக்களால் பெறப்பட்டது ஆகும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஏன் இந்த விமர்சனம்?
ஆர்.எஸ்.எஸ்ஸின் எழுதப்படாத விதிகளில் ஒன்று, ‘அவர்களது அமைப்பு மற்றும் பாஜக கட்சியைச் சேர்ந்தவர்கள் தங்களது 75 வயதில் அரசியலில் இருந்து ஓய்வு பெற வேண்டும்’ என்பது.
மோடிக்கு வருகிற செப்டம்பர் 17-ம் தேதி 75 வயது ஆகிறது.
ஆக, அதில் இருந்து தப்பிக்கத்தான் மோடி ஆர்.எஸ்.எஸ் இயக்கம் குறித்து மிக பெருமையாக பேசியுள்ளார் என்கிற விமர்சனம் எழுகிறது.
சமீபத்தில் கூட, ஆர்.ஆர்.எஸ்ஸின் தற்போதைய தலைவர் மோகன் பகவத், 75 வயதில் அரசியல் தலைவர்கள் ஓய்வுபெற வேண்டும் என்பதை வலியுறுத்தி இருந்தார்.
The RSS, founded in 1925, did not play a direct role in India’s Independence struggle.
It stayed away from the Civil Disobedience Movement, Quit India Movement, and other mass protests against British rule.#HistoryMatters #FreedomStruggle
K.B. Hedgewar, its founder, had joined… https://t.co/npLzV8zf1S— Manickam Tagore .Bமாணிக்கம் தாகூர்.ப (@manickamtagore) August 15, 2025