
“சுதந்திரப் போராட்டத்தில் எந்த விதத்திலும் பங்கு பெறாத ஆர்.எஸ்.எஸ்-ஐ சுதந்திர தின விழாவில் பெருமைப்படுத்தி பிரதமர் மோடி பேசியது நியாயமற்றது, கண்டிக்கத்தக்கது” என விருதுநகர் எம்பி மாணிக்கம் தாகூர் கடுமையாக விமர்சித்திருக்கிறார்.
விருதுநகரில் செய்தியாளர்களை சந்தித்த விருதுநகர் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர், “பிரதமர் மோடி சுதந்திர தின உரையில், ஆர்.எஸ்.எஸ்.100 ஆண்டுகள் தேசநலனுக்காக சேவை செய்துள்ளது என கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு?”,
“இதைவிட சுதந்திரப் போராட்ட வீரர்களை அவமானப்படுத்த யாரும் முடியாது. குறிப்பாக, மகாத்மா காந்தி, மாவீரன் பகத்சிங், நேரு, காமராஜர், படேல், கொடிகாத்த குமரன் ஆகியோரை இதை விட யாரும் அவமானப்படுத்த முடியாது. 1925-ல் துவங்கப்பட்ட ஆர்.எஸ்.எஸ், உப்புச் சத்தியாகிரகம், வெள்ளையனே வெளியேறு இயக்கம், ஒத்துழையாமை இயக்கம் போன்ற எந்த ஒரு போராட்டத்திலும் பங்கேற்றது இல்லை. அப்படிப்பட்ட ஆர்.எஸ்.எஸ் சுதந்திர தின விழாவில் செங்கோட்டையில் இருந்து கொண்டு பெரிய சேவை செய்ததாக சொல்வது சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டவர்களை அவமானப்படுத்துவதாகும். பிரதமர் ஆர்.எஸ்.எஸ். காரரராக இருக்கலாம். இந்த நாள் சுதந்திரத்திற்காக போராடியவர்களை கௌரவிக்க வேண்டிய நாள். சுதந்திரம் பெற்று 79 ஆண்டுகளாகி விட்டது. சுதந்திர இந்தியா எப்படி பயணிக்க வேண்டும் என சொல்ல வேண்டிய நாள். இன்று பிரதமர் இவ்வாறு பேசியது கண்டிக்கத்தக்கது.”
ஜி.எஸ்.டி வரியில் மாற்றம் வரும் தீபாவளிப் பரிசாக இருக்கும் என மோடி கூறியுள்ளாரே? என்ற கேள்விக்கு?,
“ஜி.எஸ்.டி பற்றி பேசும் போது ஒரே நாடு, ஒரே வரி எனக் கூறினார். இந்தியாவில் பாலும், தேனும் ஓடும் என்றார். இறுதியில் பெரும்பாலானோர் இருக்கின்ற தொழிலையும் மூடும்படி ஆகி விட்டது. முதலில் மார்க்கெட்டிங் நல்லாத்தான இருக்கும் கடைசியில் பினிசிங் சரியிருக்காது. இத்தீபாவளி அம்பானிக்கும், அதானிக்கும் நல்லாத்தான் இருக்கும். இதுவரை மோடி ஆற்றிய சுதந்திர தின உரையில், பல்வேறு கதைகளை கூறி வந்தார். எனவே, புதிய கதையை தற்போது கூறியுள்ளார்.
நான் கொண்டு வந்த ஜி.எஸ்.டியில் தவறை ஒப்புக் கொண்டு திருத்துகிறேன் என்று சொன்னால் பரவாயில்லை. மாற்றம் கொண்டு வருகிறேன் என்றால் செய்த தவறை ஒப்புக் கொள்வதாக தானே அர்த்தம்.” என்றார்.
விவசாயிகள், பால் உற்பத்தியாளர்கள், மீனவர்களுக்கு எதிரான கொள்கைக்கு தடுப்புச் சுவராக இருப்பேன் என பிரதமர் கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?
“2020-ல் விவசாயிகளுக்கு எதிரான கறுப்புச் சட்டங்களை கொண்டு வந்தார். இதை எதிர்த்து விவசாயிகள் ஒன்னரை ஆண்டுகள் டெல்லி எல்லையில் வெயில், மழை, குளிர் என பாராமல் போராடினர். இதில் 739 விவசாயிகள் உயிரிழந்தனர். பின் உ.பி தேர்தலுக்காக அச்சட்டத்தை நிறுத்தி வைத்தார். விவசாயிகள், சிறுகுறு விவசாயிகளைப் பற்றி அவர் கவலைப்படுவதில்லை. உலக பணக்காரர் வரிசையில் 20 இடத்தில் உள்ள அதானியை முன்னால் வரச் செய்வதைப் பற்றியே கவலைப்பட்டு வருகிறார்.”

`யாருக்கு வாக்குரிமை வேண்டுமென தேர்தல் ஆணையம் தான் முடிவு செய்யும் என கூறியுள்ளது குறித்த கேள்விக்கு?’
“இது குடியுரிமை பிரச்னை அல்ல. வாக்களிக்கும் உரிமை பற்றியது. ஆதார், ரேசன் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வாக்களிக்க மிக முக்கியமானது. ஆனால், பீஹாரில் இதை ஏற்க மறுக்கிறது. மாறாக, பாஸ்போர்ட், பான் கார்டு, தந்தையின் பிறப்புச் சான்று தர வேண்டும் என கூறுகிறது. இதை ஏழை, எளிய மக்கள் தேடி வாங்க முடியுமா? இதனால் தான் 65 இலட்சம் பேர் வாக்காளர்களாக இல்லை. இதற்காகவே பாராளுமன்றம் 14 நாட்கள் முடங்கியது. சட்ட விரோதமாக ஏழை மக்களின் வாக்குகள் நீக்கப்பட்டது குறித்து விவாதிக்க வேண்டும் என இந்தியா கூட்டணியினர் கேட்டோம். ஒரு நிமிடம் கூட வழங்கவில்லை. தற்போது ஆதாரை ஏற்க வேண்டுமென உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது. தேர்தல் ஆணையம் பா.ஜ.க-வின் ஒரு பிரிவு போல் ஒரு தலைப்பட்சமாக செயல்படுகிறது.
குறிப்பாக தலைமைத் தேர்தல் அதிகாரி ஞானேஷ் பா.ஜ.க-வின் பொதுச் செயலாளரைப் போல் செயல்படுகிறார். கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இந்தியா முழுவதும் 48 தொகுதிகளில் திருட்டுத் தனம் செய்து பாஜக வெற்றி பெற்றுள்ளது. இதை டிஜிட்டலைஸ் செய்து முறைகேடுகளை கண்டுபிடித்து அம்பலப்படுத்துவோம். இந்தியா முழுவதும் கையெழுத்து இயக்கம் நடத்த உள்ளோம். குஜராத்தில் ராகுல்காந்தி வாக்கு அதிகார யாத்திரை நடத்த உள்ளார்.”

“வரும் தமிழக சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் பட்டியல் குறித்து காங்கிரஸ் கவனம் செலுத்துமா?”
“தமிழகத்தில் என்ன முறைகேடு செய்யப் போகிறார்கள் எனத் தெரியவில்லை. இவர்களைப் பொருத்தவரை ஒவ்வொரு மாநிலத்திலும் ஒவ்வொரு விதமான முறைகேட்டில் ஈடுபட்டுள்ளனர். ஆந்திராவில் ஜெகன் மோகன் ரெட்டி, `ஒரு பூத்தில் 720 வாக்குகள் செலுத்தப்பட்டிருந்தால் இ.வி.எம் இயந்திரத்தில் 970 வாக்குகள் உள்ளது. இதேபோல் 60 சதவிகித வாக்குச்சாவடியில் இதேநிலை இருந்துள்ளது’ என புகார் தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் 50 சதவிகித வாக்குச்சாவடியில் இதேபோல் வாக்குகள் கூடியுள்ளன என நவீன் பட்நாயக் கூறுகிறார். பெங்களூரில் ஒரு சட்டமன்ற தொகுதியில் ஒரு லட்சம் போலி வாக்காளர்களை சேர்த்துள்ளனர். இப்படி வித விதமா, கலர் கலராக படம் ஓட்டியுள்ளனர் பாஜகவினர். திருட்டு விசிடி போல் பல இடங்களில் பல விதமான வாக்குத் திருட்டுகள் நடந்துள்ளது. கர்நாடாக மாநிலத்தில் தேர்தல் முறைகேட்டில் ஈடுபட்ட அதிகாரிகளுக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்தார்.