
சென்னை: சென்னையில் உள்ள மத்திய, மாநில அரசு அலுவலகங்களில் நேற்று 79-வது சுதந்திர தினம் தேசியக் கொடியேற்றி விமரிசையாகக் கொண்டாடப்பட்டது. விழாவில், சிறப்பாகப் பணியாற்றி ஊழியர்களுக்கு பரிசுகளும் வழங்கப்பட்டன. சென்னை, கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில் நடைபெற்ற சுதந்திர தின விழாவில், ஆளுநர் ஆர்.என்.ரவி தேசியக் கொடியேற்றி மரியாதை செலுத்தினார். தொடர்ந்து ஆளுநர் மாளிகை பணியாளர்களின் குழந்தைகளுக்கு அவர் சுதந்திர தின வாழ்த்துகளைத் தெரிவித்தார். லட்சுமி ரவி உடனிருந்தார். தொடர்ந்து காந்தி மண்டபத்தில் உள்ள மகாத்மா காந்தி சிலைக்கும் ஆளுநர் மரியாதை செலுத்தினார்.

தேசியக் கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்திய ஆளுநர் ஆர்.என்.ரவி.
சென்னை உயர் நீதிமன்றத்தில், தலைமை நீதிபதி எம்.எம். ஸ்ரீவஸ்தவா, தேசியக் கொடியை ஏற்றி வைத்து சிஐஎஸ்எப் போலீஸாரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றார். நிகழ்வில், நீதிபதிகள், ஓய்வு பெற்ற நீதிபதிகள், சட்டத்துறை அமைச்சர் ரகுபதி, அரசு தலைமை வழக்கறிஞர் பி.எஸ்.ராமன், மாநில அரசு தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன்முகமது ஜின்னா, மாநில அரசு ப்ளீடர் எட்வின் பிரபாகர் உள்ளிட்ட அரசு வழக்கறிஞர்கள், தமிழக டிஜிபி சங்கர் ஜிவால், சென்னை காவல் ஆணையர் அருண் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.