
கிட்டத்தட்ட 8 மாதங்களாக, பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் பாமக தலைவர் அன்புமணிக்கும் முட்டல், மோதல் நடந்து வருகிறது.
இருவரும் மாறி மாறி மாநாடுகள், பொதுக்குழு நடத்துவது, கட்சியினரை நீக்குவது, சேர்ப்பது என இருந்து வருகின்றனர்.
இருவருக்குள்ளும் சமாதானம் ஏற்படுத்தப் பல தரப்பினர் முயன்றும் ஒரு பயனும் இல்லை.
அன்புமணி தைலாபுரம் சென்று ராமதாஸிடம் பேசியும் பயனில்லை.
ராமதாஸ் செல்லவில்லை
ராமதாஸ் வெளிப்படையாகவே அன்புமணியை விமர்சித்து வருகிறார். ஆனால், கடந்த சனிக்கிழமை (ஆகஸ்ட் 9), அன்புமணி நடத்திய பொதுக்குழுக் கூட்டத்தில் கூட, ராமதாஸிற்காக மேடையில் ஒரு நாற்காலி ஒதுக்கப்பட்டிருந்தது. ஆனால், அவர் செல்லவில்லை.
கடந்த மாதம், ராமதாஸ் இல்லாத நேரத்தில், தைலாபுரம் சென்ற அன்புமணி தனது தாய் சரஸ்வதியைச் சந்தித்து வந்தார்.
பதிலுக்கு, பனையூருக்கு சரஸ்வதியும் வந்திருந்தார்.
இந்தச் சம்பவங்களுக்குப் பிறகு, தன் வீட்டில் ஒட்டுக்கேட்பு கருவி பொருத்தப்பட்டுள்ளது என்ற பகீர் குற்றச்சாட்டை ராமதாஸ் எழுப்பி இருந்தார்.
ஏன் அன்புமணி தைலாபுரம் சென்றார்?
இந்த நிலையில், நேற்று தனது தாய் சரஸ்வதியின் பிறந்த நாளையொட்டி, குடும்பத்துடன் தைலாபுரத்திற்கு விசிட் அடித்திருக்கிறார் அன்புமணி.
ராமதாஸ் முன்னிலையில், தனது தாயின் பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடியிருக்கிறார் அன்புமணி. ஆனால், ராமதாஸ், அன்புமணி இருவரும் பேசிக்கொண்டார்களா… இந்த நிகழ்வு இருவரும் சமாதானம் எட்டியதற்கான அறிகுறியா என்பது தெரியவில்லை.