
ராமநாதபுரத்தில் நாட்டின் 79வது சுதந்திர தினத்தை முன்னிட்டு மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரே உள்ள ஆயுதப்படை மைதானத்தில் சுதந்திர தின விழா கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது.
மாவட்ட ஆட்சியர் சிம்ரன்ஜீத் சிங் காலோன் தேசியக் கொடியை ஏற்றி வைத்து சமாதான புறாக்களைப் பறக்க விட்டார். அதனைத் தொடர்ந்து சுதந்திரப் போராட்ட தியாகிகளின் வாரிசுகளுக்குப் பொன்னாடை போர்த்தி கௌரவித்ததுடன் காவல் துறையினரின் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக்கொண்டார்.
இதனைத் தொடர்ந்து மாவட்ட அளவில் சிறப்பாகப் பணியாற்றிய 75 காவல்துறை அலுவலர்கள் மற்றும் பல்வேறு துறைகளைச் சேர்ந்த 229 அலுவலர்களுக்குப் பாராட்டு சான்றிதழ் வழங்கியதுடன், பல்வேறு நலத்திட்ட உதவிகளையும் வழங்கினார்.

இவ்விழாவில் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் தனியார்ப் பள்ளிகளைச் சேர்ந்த 1227 மாணவ, மாணவியர் பங்கேற்ற கலை நிகழ்ச்சிகள் நடந்தன.
அப்போது தனியார் பேக்கரி நிறுவனத்தினரால் தேசியக் கொடி வடிவத்தில் தயாரிக்கப்பட்ட கேக் விழா மைதானத்தில் வைக்கப்பட்டிருந்தது. மூவர்ண நிறங்களுக்கு மத்தியில் அசோக சக்கரம் பொறிக்கப்பட்டிருந்த 79 கிலோ எடையிலான அந்த கேக்கினை, ராமநாதபுரம் மாவட்ட ஆட்சியர் சிம்ரன் ஜித் சிங் காலோன், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் சந்தீஷ் உள்ளிட்ட மாவட்ட அதிகாரிகள் வெட்டினர்.

நாடு முழுவதும் அனைத்து தரப்பினரும் தேசியக் கொடிக்கென மரியாதையினைச் செலுத்திய நிலையில், தேசியக் கொடியின் வடிவத்தில் தயாரிக்கப்பட்ட கேக்கினை மாவட்ட அதிகாரிகள் வெட்டி கொண்டாடியிருப்பது பொது மக்களிடையே பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளதுடன், சமூக வலைத்தளங்களிலும் விவாத பொருளாக மாறியுள்ளது.
கொண்டாட்டம் என்ற பெயரில் அதிகாரிகள் நடத்திய இது போன்ற செயல்களை வரும் காலங்களில் தவிர்க்க வேண்டும் என்பது பொதுமக்களின் கருத்தாக உள்ளது.