
1985ம் ஆண்டு வெளியான ‘முதல் மரியாதை’ படத்தில் இயக்குநர் பாரதிராஜாவால் அறிமுகமான தீபனை ஞாபகமிருக்கிறதா? ‘அந்த நிலாவத்தான் நான் கையில புடிச்சேன் என் ராசாத்திக்காக’ எனச் செவுளியுடன் டூயட் பாடுவாரே, அவரேதான். மறைந்த தமிழக முதல்வர் எம்.ஜி.ஆரின் மனைவி ஜானகி அம்மையாரின் சகோதரர் மகன்.
சரியாக 40 ஆண்டுகளுக்குப் பிறகு இப்போது சினிமா வட்டாரத்தில் இவரை அடிக்கடி பார்க்க முடிகிறது.
சில ஆண்டுகளுக்கு முன் ‘கேர் ஆஃப் காதல்’ என்ற படத்தில் நடித்தவர், தொடர்ந்து வாய்ப்புகள் வந்தால் சினிமாவில் கவனம் செலுத்துவேன் எனச் சொல்லியிருந்தார்.
இந்த நிலையில் சென்னையில் நடக்கவிருக்கும் தனது மகளின் திருமணத்துக்கான அழைப்பிதழை சினிமா வட்டாரங்களில் பலருக்கும் வைத்து வருகிறார்.
தீபனின் மகள் பிரசித்தா. இவருக்கு பொள்ளாச்சியைச் சேர்ந்த பாலாஜி என்பவருடன் நிச்சயிக்கப்பட்ட திருமணம் வருகிற 29ம் தேதி சென்னையின் பிரபல நட்சத்திர ஓட்டல் ஒன்றில் நடக்கவிருக்கிறது.
அன்று காலை திருமணமும் தொடர்ந்து மதியம் வரவேற்பும் நடக்கவிருக்கிறது. சினிமா மற்றும் அரசியல் ஏரியாவில் இன்னும் தொடர்பிலிருக்கும் நண்பர்கள் ஒருவர் விடாமல் அழைப்பிதழ் தந்து வருகிறாராம்.
திருமண அழைப்பிதழில் ’இரட்டை இலை’ சின்னம் இடம் பெற்றுள்ளது.

இது தொடர்பாக தீபனின் நட்பு வட்டாரத்தில் பேசிய போது,
‘புரட்சித் தலைவர் குடும்பத்து ஆளுங்க. இரட்டை இலை சின்னத்தை எப்படி மறப்பார்? நேரடி அரசியல்ல வேணும்னா அவர் குடும்பம் ஈடுபடாம இருக்கலாம். அதுக்காக சின்னத்தை, கட்சியை எப்படி மறப்பாங்க? அதிமுகவைச் சேர்ந்த சிலருக்கும் திருமண அழைப்பிதழ் கொடுக்கப்பட்டிருக்கு. அவங்களும் திருமணத்துல கலந்துக்கிடலாம்’ என்கிறார்கள் அவர்கள்.