
டெல்லி செங்கோட்டையில் இந்தியாவின் 79-வது சுதந்திர தினக் கொண்டாட்டங்கள் பிரதமர் மோடியின் கொடியேற்றத்துடன் இன்று நடைபெற்றது.
அப்போது பிரதமர் மோடி தனது உரையில், 1948, 1975-77, 1992 என மூன்று முறை மத்திய அரசால் தடைசெய்யப்பட்ட ஆர்.எஸ்.எஸ் இயக்கத்தைப் பாராட்டிப் பேசியிருந்தார்.
குறிப்பாக, “ஆர்.எஸ்.எஸ் இந்நாட்டிற்கு 100 ஆண்டுகள் சேவை செய்வது பெருமைமிக்க, பொன்மயமான அத்தியாயம். ஸ்வயம் சேவகர்கள் நமது தாய்நாட்டின் நலனுக்காக தங்கள் வாழ்க்கையை அர்ப்பணித்தனர்.
ஒரு வகையில், உலகின் மிகப்பெரிய அரசு சாரா நிறுவனம் ஆர்.எஸ்.எஸ். இது 100 ஆண்டுக்கால அர்ப்பணிப்பு வரலாற்றைக் கொண்டுள்ளது” என மோடி பெருமையாகப் பேசியிருந்தார்.
இந்த நிலையில், மோடியின் இத்தகைய பேச்சால் வி.சி.க தலைவரும் எம்.பி-யுமான திருமாவளவன் அவரை விமர்சித்திருக்கிறார்.
மதுரையில் செய்தியாளர்களிடம் பேசிய திருமாவளவன், “தான் ஒரு ஆர்.எஸ்.எஸ் தயாரிப்பு என்பதை அவர் மீண்டும் உறுதி செய்திருக்கிறார். ஆர்.எஸ்.எஸ் பாசறையில் வளர்ந்தவர்கள்தான் இன்று நாட்டை ஆண்டு கொண்டிருக்கிறார்கள்.
நாடாளுமன்ற ஜனநாயகத்தைப் பயன்படுத்தி ஆர்.எஸ்.எஸ்ஸின் செயல்திட்டத்தைத்தான் நிறைவேற்றி வருகிறார்கள்.
அதனால்தான் இன்றைக்கு நாடு முழுவதும் மதத்தின் பெயராலும், சாதியின் பெயராலும் பதற்றம் நிலவுகிறது, வன்முறைகள் வெடிக்கின்றன.

ஆர்.எஸ்.எஸ்ஸை சுதந்திர தின விழாவில் அவர் பாராட்டியிருப்பது ஏற்புடையதல்ல.
அந்த இயக்கம் அரசு சாராத தொண்டு நிறுவனம் என்றாலும்கூட, இந்திய ஒன்றிய அரசால் தடைசெய்யப்பட்ட ஒரு இயக்கம். சிறுபான்மை சமூகத்தினருக்கு எதிராக வெறுப்பு அரசியலைப் பரப்புகின்ற இயக்கம்.
சாதி அடிப்படையில் இந்துக்களை அணிதிரட்டுகின்ற இயக்கம். இந்து பெரும்பான்மைவாதம் என்கிற பெயரால் மக்களைப் பிளவுபடுத்துகின்ற இயக்கம். அப்படிப்பட்ட இயக்கத்தை, 140 கோடி மக்களுக்குமான பிரதமர் சுதந்திர விழாவில் பாராட்டிப் பேசியிருப்பது ஏற்புடையது அல்ல” என்று கூறினார்.