
சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே 13 நாள்களாக தனியார்மயமாதலை எதிர்த்தும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை, உயர் நீதிமன்றத்தின் உத்தரவின் பேரில் ஆகஸ்ட் 13-ம் தேதி நள்ளிரவு போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.
அடுத்த நாளான நேற்று (ஆகஸ்ட் 14) ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில், தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை விட்டுவிட்டு புதிதாக 6 திட்டங்கள் கொண்டுவரப்பட்டன.
இன்று, அரசின் இத்திட்டங்களுக்கு தூய்மைப் பணியாளர்கள் நன்றி தெரிவிப்பதாக, அமைச்சர் சேகர் பாபுவும், மேயர் பிரியாவும் தூய்மைப் பணியாளர்கள் குழு ஒன்றை முதல்வரிடம் அழைத்துச் சென்றனர்.
இந்த நிலையில் மதுரையில் செய்தியாளர்கள் சந்திப்பில் தூய்மைப் பணியாளர்கள் விவகாரம் குறித்துப் பேசிய விசிக தலைவர் மற்றும் எம்.பி., தொல். திருமாவளவன், “தூய்மைப் பணியாளர்கள் பிரச்னையில் தொடக்கத்திலிருந்தே அவர்களுக்கு ஆதரவாக குரல் கொடுத்திருக்கிறோம்.
இந்திய ஒன்றிய அரசின் கட்டுப்பாட்டிலிருக்கும் துறைகளாக இருந்தாலும், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டிலிருக்கும் துறைகளாக இருந்தாலும் தனியார்மயப்படுத்துதல் தீவிரமடைந்து வருகிறது. இதை எதிர்க்க வேண்டும்.
இந்தப் பிரச்னையில் வி.சி.க தமிழ்நாடு அரசுக்கு விடுக்கின்ற வேண்டுகோள், `தனியார்மயமாக்கும் முயற்சியைக் கைவிடவேண்டும். தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சிகளில், நகராட்சிகளில், பேரூராட்சிகளில், ஊரக அமைப்புகளில் பணியாற்றக்கூடிய தூய்மைப் பணியாளர்கள் அனைவரையும் அரசு ஊழியர்களாக ஆக்க வேண்டும். அவர்களை தனியார் வசம் ஒப்படைக்கக்கூடாது’.
தூய்மைப் பணியாளர்களை வலுக்கட்டாயமாகக் கைதுசெய்திருக்கத் தேவையில்லை. கைது நடவடிக்கை மற்றும் அவர்கள் மீது வழக்குப் போடப்பட்டிருப்பதைக் கண்டிப்பதோடு, அந்த வழக்குகளைத் திரும்பப்பெற வலியுறுத்துகிறோம்.
இன்று மதுரையில் செய்தியாளர் சந்திப்பில்… pic.twitter.com/BbvTaG1Efo
— Thol. Thirumavalavan (@thirumaofficial) August 15, 2025
இந்த விவகாரத்தை வைத்து அரசியல் செய்வது அற்பமான அணுகுமுறை. தூய்மைப் பணியாளர்களுக்கு நீதி கிடைக்க வேண்டும் என்பதைவிட, இப்பிரச்னையைப் பயன்படுத்தி தி.மு.க கூட்டணியை உடைக்க வேண்டும் என்பதுதான் அவர்களின் நோக்கமாக இருக்கிறது.
மேலும், தூய்மைப் பணியாளர்கள் பெரும்பாலும் தலித்துகளாகத்தான் இருக்கிறார்கள், அதனால் இந்தப் பிரச்னையை தலித்துகள்தான் பேச வேண்டும், திருமாவளவன்தான் பேசவேண்டும் என்ற பார்வை ஏற்புடையதல்ல.
13 நாள்களாக அ.தி.மு.க என்ன செய்துகொண்டிருந்தது. கடைசி நாளில் போலீஸ் கைதுசெய்யும்போதுதான் எடப்பாடி பழனிசாமி வாய்திறக்கிறார். 15 மண்டலங்களில் 11 மண்டலங்களை தனியார்மயப்படுத்தினார்களே அதற்கு அவர்களின் பதில் என்ன?” என்று கேள்வி எழுப்பினார்.