
புதுடெல்லி: பாஜகவுடன் இணைந்து, தேர்தல் ஆணையம் வாக்கு திருட்டில் ஈடுபடுவதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். கடந்தாண்டு நடைபெற்ற மக்களவை தேர்தலில் மத்திய பெங்களூரு மக்களவை தொகுதியில், உள்ள மகாதேவ்புரா சட்டப்பேரவை தொகுதியில் 1 லட்சத்துக்கும் மேற்பட்ட வாக்குகள் திருடப்பட்டதால், காங்கிரஸ் வேட்பாளர் தோல்வியுற்றார் என அவர் குற்றம் சாட்டினார்.
இதுகுறித்து தேர்தல் ஆணையம் விடுத்துள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஒருவருக்கு ஒரு ஓட்டு என்ற நடைமுறை கடந்த 1951-52-ம் ஆண்டு தேர்தலில் இருந்து உள்ளது. தேர்தலில் யாராவது 2 முறை வாக்குகள் அளித்திருந்தால், அதற்கான ஆதாரத்தை தேர்தல் ஆணையத்துடன் பகிர வேண்டும். அதைவிடுத்து வாக்காளர்கள் அனைவரையும் திருடர்கள் என கூறக் கூடாது.