
புதுடெல்லி: கடந்த மக்களவைத் தேர்தலில் வாக்குத் திருட்டு நடந்துள்ளதாக மக்களவை எதிர்க்கட்சி தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியிருந்தார். இது தொடர்பாக கர்நாடகாவின் மகாதேவபுரா தொகுதி வாக்காளர் பட்டியல் தரவுகளை அவர் பகிர்ந்து கொண்டார். இந்நிலையில் வாக்காளர் பட்டியலை பாஜக ஆய்வு செய்து திரட்டிய தரவுகளை அக்கட்சி எம்.பி. அனுராக் தாக்கூர் நேற்று டெல்லியில் பகிர்ந்து கொண்டார்.
அப்போது அவர் கூறியதாவது: ராகுல் காந்தியின் ரேபரேலி, பிரியங்கா காந்தியின் வயநாடு, அகிலேஷ் யாதவின் கனோஜ், டிம்பிள் யாதவின் மெயின்புரி, அபிஷேக் பானர்ஜியின் டயமன்ட் ஹார்பர் ஆகிய மக்களவை தொகுதிகளிலும் மு.க.ஸ்டாலினின் கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதியிலும் வாக்காளர் சேர்க்கையில் முறைகேடு நடந்துள்ளது. பாஜக நடத்திய ஆய்வில் இது தெரியவந்துள்ளது.