
சென்னை: ‘உங்களுடன் ஸ்டாலின்’ முகாம்களில் பெறப்படும் மனுக்கள் மீது உரிய காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர்களுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவுறுத்தினார். ‘உங்களுடன் ஸ்டாலின்’ மற்றும் ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டங்களின் செயலாக்கம் குறித்து அனைத்து மாவட்ட ஆட்சியர்களுடன் சென்னை தலைமைச் செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி வாயிலாக ஆய்வு நடத்தினார்.
கூட்டத்தில், ‘உங்களுடன் ஸ்டாலின்’ திட்டம் மக்களிடையே மிகுந்த வரவேற்பை பெற்று வருவதை தொடர்ந்து, இதற்காக நன்கு திட்டமிட்டுப் பணியாற்றி வரும் மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் அனைத்துத் துறை அலுவலர்களையும் பாராட்டினார். அதேபோன்று, ‘நலம் காக்கும் ஸ்டாலின்’ திட்டமும் மிகச் சிறப்பாக நடைமுறைபடுத்தப்பட்டு வருவதால், அதற்கான பணிகளில் ஈடுபட்டு வரும் சுகாதாரத்துறை சார்ந்த மருத்துவர்கள் மற்றும் துறை அலுவலர்களையும் பாராட்டினார்.