
நம் ஊர்களில் நடக்கும் திருவிழா, பண்டிகைகளின் போது வீட்டின் முன் போடும் கோலங்களின் மேல் சாணியை உருண்டையாக்கி அதைக் கோலத்தின் மீது வைத்து விநாயகராக வழிபடும் பழக்கம் நெடுங்காலமாக இருந்து வருகிறது.
ஏறத்தாழ எல்லோருக்கும் எளிதாகச் செய்யக் கூடிய விநாயகர் என்றால் சாணியிலிருந்து தயாரிப்பதுதான். அந்த ஐடியாவை வைத்தே தற்போது விநாயகரின் முழு உருவத்தையும் சாணியிலேயே செய்து சிலைகளாக மாற்றி விற்பனை செய்து வருகிறார் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையைச் சேர்ந்த ரேவதி.
விநாயகர் சிலைகள் இரசாயன கலவைகளால் செய்யப்படும் நிலையில் இயற்கையாக முறையில் நாம் இதுவரை செய்து வந்த பழக்கத்தை அப்படியே பின்பற்றுவதோடு, அதில் ஒரு புதுமையைப் புகுத்தி தன்னுடைய படைப்பாற்றலால் அழகான விநாயகர் சிலைகளைச் செய்து வருகிறார்.
இது குறித்து ரேவதியிடம் பேசும்போது, “திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் இருக்கிற நாயக்கன்பட்டி கிராமத்தில் இருக்கிறேன். சொந்தமாக விவசாயம் செய்கிறோம். அதோடு மண்புழு உரத்தைச் சொந்தமாகத் தயாரித்து வருகிறோம். சொந்தமாக மாடுகள் வைத்து இருக்கிறோம். மாடுகள் போடும் சாணியை எடுத்து மண்புழு உரம் தயாரித்து வருகிறோம்.
சாணியில் வேறு என்ன மதிப்புக் கூட்டுப் பொருள்கள் செய்யலாம் என்று யோசித்து சாணியிலேயே விநாயகர் செய்து வருகிறேன். ரசாயன கலவைகளை வைத்து விநாயகர் செய்யும் போது நாம் ஏன் இயற்கை முறையில் இந்த மாதிரியான விநாயகரைச் செய்யக் கூடாது? என்று என்னை நானே கேட்டுச் செய்யத் தொடங்கியதுதான் இந்த விநாயகர் சிலைகள்.
மாட்டிலிருந்து கிடைக்கும் கோமியம், சாணி, பால், தயிர் இவையெல்லாவற்றையும் கலந்து இந்த விநாயகரைச் செய்கிறேன்.

இதனுடன் குங்கிலியம், கோரைக் கிழங்கு, மஞ்சள் போன்றவற்றையும் சேர்த்துக் கொள்வேன். சாணியை மட்டுமே வைத்து ஒரு சிலையைச் செய்யும் போது அது காய்ந்தவுடன் பிரிந்து விடுவதற்கான வாய்ப்புகள் இருக்கிறது. அதனால் பஞ்சகாவியம் சேர்த்து சிலையைச் செய்கிறோம்.
பஞ்சகவ்வியத்தில் நெய், பால், தயிர் போன்றவற்றைக் கலக்கிறோம். குங்கிலியம், மஞ்சள் இரண்டுமே வாசனைக்காகவும், மஞ்சள் சாணியில் எந்த விதமான பாக்டீரியாக்களையும் அண்ட விடாது என்பதற்காகவுமே சேர்க்கிறேன். நாங்கள் செய்யும் சிலைகள் உள்ளங்கை அளவிற்கு மேல் ஒரு இரண்டு அடி இருக்கும்.

சிலைகளின் மேல் தண்ணீர் படாமல் பார்த்துக் கொள்ள வேண்டும் இந்தச் சிலைகளைச் சரியாகப் பராமரித்தால் ஒரு ஆண்டுக்கு மேல் அப்படியே இருக்கும். நான் ஒரு வருடத்திற்கு முன் செய்த முதல் சிலை இப்போதும் அப்படியே இருக்கிறது. இந்தச் சிலைகள் இயற்கை முறையில் செய்வதால் நமக்கும் எந்தத் தீங்கும் வராது.
தற்போது சிலைகளை நாங்கள் ஆர்டர் கொடுத்தால் செய்து கொடுத்து வருகிறோம். ஒரு விநாயகர் சிலை 70 ரூபாய்க்கு விற்கிறோம். இதனுடன் சாம்பிராணி, விளக்கு எல்லாம் சேர்த்து மொத்தம் ரூ. 100 ரூபாய்க்கு விற்பனை செய்து வருகிறோம்” என்றார்.