• August 15, 2025
  • NewsEditor
  • 0

பொண்ணுங்க படிக்கணும் படிக்கணும்னு சொல்றதுக்குப் பின்னாடி எவ்ளோ கனமான காரணமிருக்கு அப்படிங்கிறதுக்கு, நாமக்கல் மாவட்டம் தத்தாதிருபுரம் கிராமத்தைச் சேர்ந்த கவிக்குயில் வாழ்க்கையும் ஓர் உதாரணமாகிருக்கு. கல்வி, கவிக்குயில் வாழ்க்கையில என்ன செஞ்சிருக்குன்னு அவங்களே சொல்றாங்க.

ஆசிரியை கவிக்குயில்

”அப்பா தறி வேலை பார்த்துட்டிருந்தாரு. அம்மா முட்டை வியாபாரம் பண்ணிக்கிட்டிருந்தாங்க. ரொம்ப கஷ்ட ஜீவனம். நானும் என் தம்பியும் அரசு தொடக்கப்பள்ளியில படிச்சோம். அங்க தர சத்துணவுதான் பல நாள் எங்களோட ஒருநாள் உணவு. எனக்கும் தம்பிக்கும் நோட்டு, புத்தகம் வாங்கணும்னாகூட சிரமம்தான். ஆனா, நான் நல்லா படிச்சேன்.

பத்தாவதுல 436 மதிப்பெண் வாங்கினேன். பிளஸ் ஒன்ல மேத்ஸ் குரூப் எடுத்தேன். பிளஸ் ஒன் பாஸாகி பிளஸ் டூ போனதுகப்புறம்தான் என் வாழ்க்கையே மாறிடுச்சு.

என் ஜாதகத்துல ஏதோ பிரச்னை இருக்குன்னு சொல்லி என் வீட்ல எனக்கு உடனே கல்யாணம் பண்ணி வெச்சிட்டாங்க. எனக்கோ படிக்கணும்கிற ஆசை அவ்ளோ இருந்துச்சு. என் நிலைமையைப் பார்த்த கணவர், ‘நீ மறுபடியும் பள்ளிக்கூடம் போய் படி. நான் உன்னைப் படிக்க வெக்கிறேன்’னு சொன்னார். எனக்கோ கல்யாணம் பண்ணிக்கிட்டு ஸ்கூலுக்குப் போனா ஃப்ரெண்ட்ஸெல்லாம் கிண்டல் பண்ணுவாங்கன்னு பயம்.

அதனால, எங்கம்மாகிட்ட தினமும் ‘எனக்கு எதுக்கு இப்போ கல்யாணம் செஞ்சு வெச்சேன்’னு சண்டை போட்டுக்கிட்டே இருந்தேன். ஒருகட்டத்துல ஸ்கூலுக்குப் போவோம்னு முடிவெடுத்தேன். போன முதல் நாள் ஹெட் மாஸ்டர் என்னைக் கூப்பிட்டுப் பேசினாரு. ‘இங்க யாராவது கேலி, கிண்டல் செஞ்சாலோ, உன்னைப் படிக்கக்கூடாதுன்னு சொன்னாலோ என்கிட்ட சொல்லும்மா. நான் பார்த்துக்கிறேன்’னு சொன்னாரு. தைரியமா படிக்க ஆரம்பிச்சேன். ஆனா, வீடு, படிப்புன்னு இருந்ததால பத்தாவது அளவுக்கு பிளஸ் டூவுல மதிப்பெண் எடுக்க முடியல.

டீச்சர் டிரெய்னிங் பண்ணலாம்னு முடிவு பண்ணி போடுறதுக்குள்ள ரொம்ப லேட்டாயிடுச்சு. சரி, ஆர்ட்ஸ் காலேஜ்ல படிக்கலாம்னு அப்ளிகேஷன் போட்டா, நான் கேட்ட மேத்ஸ்ல எல்லா சீட்டும் ஃபுல்லாகிடுச்சு. ‘கெமிஸ்ட்ரி படிம்மா’ன்னு காலேஜ்ல சொன்னாங்க. ஆனா, எனக்கு டீச்சர் டிரெயினிங் மேலேயே விருப்பமா இருந்துச்சு. அடுத்த வருஷம் சீக்கிரமா டீச்சர் டிரெய்னிங்குக்கு அப்ளை செய்யலாம்னு முடிவெடுத்துட்டு, அந்த வருஷம் வீட்லேயே இருந்துட்டேன்.

நான் நினைச்ச மாதிரியே அடுத்த வருஷம் டீச்சர் டிரெய்னிங்ல சீட் கிடைச்சிது. 2007-ல டீச்சர் டிரெய்னிங் முடிச்சேன். ஆனா, உடனே வேலைக்குப் போக முடியாத சூழ்நிலை. டீச்சர் டிரெய்னிங் முடிச்சவங்க TET எக்ஸாம் எழுதலாம்னு புதிய கல்விக்கொள்கை வந்துச்சு.

2012-ல எக்ஸாம் எழுதினேன். ஆனா, நல்ல மதிப்பெண் எடுக்க முடியல. மனசைத் தளர விடாம அடுத்த வருஷமும் எழுதினேன். பாஸாகிட்டேன். ஆனா, அந்த நேரத்துல யாருக்குமே போஸ்ட்டிங் போடல.

ஆசிரியை கவிக்குயில்

சரி, அடுத்து என்ன பண்றதுன்னு பார்ப்போம்னு டிஎன்பிஎஸ்சி பரீட்சைக்குப் படிக்க ஆரம்பிச்சேன். முதல் முயற்சியில பாஸ் பண்ண முடியல. மறுபடியும் முயற்சி பண்ணலாம்னு யோசிக்கிற நேரத்துல குடும்பத்துல பிரச்னைகள் வர ஆரம்பிச்சிடுச்சு.

‘கல்யாணமாகி இத்தன வருஷம் ஆகிடுச்சு. இன்னும் படிக்கிறேன் படிக்கிறேன்னு சொல்லிக்கிட்டு இருக்கே. எப்பதான் குழந்தை பெத்துக்குவேன்னு கேட்க ஆரம்பிச்சிட்டாங்க. என்னடா இது, படிச்சதுக்கு வேலை கிடைக்கல; குழந்தையும் இல்லைன்னு ரொம்ப மன உளைச்சலுக்கு ஆளாகிட்டேன்.

ரெண்டு வருஷம் குழந்தையின்மைக்கான ட்ரீட்மெண்ட் எடுத்துக்கிட்டேன். கர்ப்பமானேன். ஆனா, அந்தக் கரு கலைஞ்சிப் போயிடுச்சு. அந்த நேரத்துல நான் யாரு வீட்டுக்குப் போகாம வீட்ல உட்கார்ந்துட்டு அழுதுக்கிட்டிருப்பேன். இல்லைன்னா ஏதாவது யோசிட்டே இருப்பேன்.

என் நிலைமையைப் பார்த்த என் வீட்டுக்காரர், டிஎன்பிஎஸ்சி கோச்சிங் கிளாஸ்ல சேர்த்துவிடுறேன்னு சொன்னார். ஆனா, நான் மனசளவுல ரொம்ப சோர்ந்து போயிருந்ததால, வேண்டாம்னு மறுத்துட்டேன். வீட்லேயே முடங்கிக் கிடந்தேன். இந்த நிலையில என் வீட்டுக்காரருக்கு தலையில பிட்யூட்டரி சுரப்பில ஒரு கட்டி இருக்குன்னு கண்டுபிடிச்சாங்க. அதுக்கு ஆப்ரேஷன் செய்யணும்னா நிறைய செலவாகும்னு சொல்லிட்டாங்க.

இனி அவ்ளோதான்னு வாழ்க்கை மேல தன்னம்பிக்கை இழந்து இருந்த நேரத்துல நான் மறுபடியும் மாசமா இருக்கேன்னு தெரிஞ்சிது. பையன் பிறந்தான். ஒரு வருஷம் அவன்கூடவே இருந்தேன். அந்த நேரத்துலதான் TET பாஸ் ஆனவங்க SET எக்ஸாம் எழுதினால் ஆசிரியை ஆகலாம்கிற அறிவுப்பு வந்துச்சு. என்னோட ஆசிரியர் கனவு, கணவரோட ஹெல்த், ரொம்ப வருஷம் கழிச்சு எங்களை நம்பி பிறந்த குழந்தை… எல்லாம் சேர்ந்து வெறிபிடிச்ச மாதிரி படிச்சேன்.

என் பிள்ளையோட ரெண்டாவது பிறந்த நாள் அன்னிக்கு SET எக்ஸாம் எழுதினேன். பாஸானேன். ரிசல்ட் வந்த அன்னிக்கு சந்தோஷத்துல ஓன்னு கதறி அழுதேன். இதுக்கிடையில என் வீட்டுக்காரருக்கும் ஆப்ரேஷன் நல்லபடியா முடிஞ்சது.

இதோ, நான் பட்டப்பாட்டுக்கெல்லாம் பலன் கிடைச்சிடுச்சு. இப்போ நான் திருப்பத்தூர் மாவட்டம் நாட்டராம்பள்ளி பிளாக் தகரகுப்பம் அரசுப் பள்ளியில ஐந்தாம் வகுப்பு மாணவர்களுக்கு ஆசிரியரா இருக்கேன். நான் படிச்ச கல்வி என்னைக் கைவிடல. பொண்ணுங்க படிக்கணும்க” என்கிறார் உணர்ச்சி மேலிட கவிக்குயில்.

ரொம்ப சரி!

சினிமா விகடனின் பிரத்யேக Whatsapp க்ரூப்

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

சினிமா தொடர்பான எக்ஸ்க்ளூசிவ் அப்டேட், அசத்தல் பேட்டிகள், டி.வி அப்டேட்கள் என எதையும் மிஸ் செய்யாமல் தெரிந்து கொள்ள…

உங்கள் வாட்ஸ் அப் மூலமே இணைந்திருங்கள் சினிமா விகடனுடன்…

https://chat.whatsapp.com/JSk78H7siYK4aL2qO1RglR

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *