• August 15, 2025
  • NewsEditor
  • 0

Doctor Vikatan: கேட்டராக்ட் பிரச்னையின் அறிகுறிகள் எப்படியிருக்கும், கேட்டராக்ட் இருப்பது கண்டுபிடிக்கப்பட்ட உடனேயே அறுவை சிகிச்சை செய்ய முடியாதா, எத்தனை வருடங்களுக்குள் செய்ய வேண்டும். அறுவை சிகிச்சையைத் தவிர்த்துவிட்டு வேறு சிகிச்சைகள் உள்ளனவா?

பதில் சொல்கிறார் சென்னையைச் சேர்ந்த கண் மருத்துவர் விஜய் ஷங்கர்.

கண் மருத்துவர் விஜய் ஷங்கர்

கேட்டராக்ட் எனப்படும் கண்புரை பாதிப்புக்குள்ளானால், சம்பந்தப்பட்ட நபருக்கு முதலில் பார்வை மங்கத் தொடங்கும்.  அதாவது பார்வை தெளிவாகத் தெரியாது. இதை  ‘Blurred vision’ என்று சொல்கிறோம். 

குறிப்பாக இவர்களுக்கு இரவில் பார்வையில் தெளிவு இருக்காது. விளக்கு வெளிச்சத்தில்கூட பார்வை தெளிவாகத் தெரியாது. விளக்கைச் சுற்றிலும் அலைஅலையாகத் தெரியலாம். நிறங்கள் பளிச்செனத் தெரியாமல், அவையும் மங்கலாகத் தெரியும். ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும். ஏர்லி (early) கேட்டராக்ட், இம்மெச்சூர் (immature ) கேட்டராக்ட், மெச்சூர் (mature) கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் (hypermature) கேட்டராக்ட் என கண்புரை பாதிப்பில் நிறைய ஸ்டேஜ் உண்டு. 

இவற்றில் ஏர்லி கேட்டராக்ட் இருந்தால் உடனடியாக அறுவைசிகிச்சை தேவையில்லை. சம்பந்தப்பட்ட நபருக்கு பார்வையில் பிரச்னை இல்லாதவரை அவர்களை அப்படியே இருக்க அனுமதிக்கலாம். பார்வை மங்கத் தொடங்கினால் மட்டுமே கவலைப்பட வேண்டும்.

ஏற்கெனவே கண்ணாடி அணிந்தவர் என்றால், கண்புரை பாதிப்பு நாளுக்கு நாள் தீவிரமாவதன் காரணமாக, அடிக்கடி கண்ணாடியை மாற்ற வேண்டியிருக்கும்.

கேட்டராக்ட் பாதித்த நபருக்கு சர்க்கரைநோய் போன்ற பிரச்னைகள் இருந்தால், அவர்களது கண்புரை பாதிப்பானது சீக்கிரமே தீவிரமடைய ஆரம்பிக்கும். மெச்சூர் கேட்டராக்ட் மற்றும் ஹைப்பர்மெச்சூர் கேட்டராக்ட் நிலைகளில் பார்வை பாதிப்பு தீவிரமாக இருக்கும் என்பதால், உடனடியாக அறுவை சிகிச்சை செய்ய வேண்டி வரலாம்.

உலகிலேயே கேட்டராக்ட் பாதிப்புக்கு அறுவை சிகிச்சை மட்டும்தான் ஒரே தீர்வு. வேறு சிகிச்சைகள் கிடையாது. லேட்டஸ்ட்டாக லேசர் மற்றும் ஃப்ளாக்ஸ் (FLACS or Femtosecond Laser-Assisted Cataract Surgery) என நவீன சிகிச்சைகள் இருக்கின்றன. எளிதாகச் செய்யப்படும் இந்தச் சிகிச்சைகளில் சுலபமாக கண்களுக்குள் லென்ஸை பொருத்திவிடலாம். கேட்டராக்ட் அறுவை சிகிச்சை செய்துகொண்ட பிறகு லென்ஸ் இல்லாமல் இருக்க முடியுமா என்று நிறைய பேர் கேட்பதுண்டு. கேட்டராக்ட் ஆபரேஷன் என்றாலே லென்ஸை எடுத்துவிட்டு வேறு புதிய லென்ஸ் வைப்பதுதான். கண்புரை பாதித்த லென்ஸை அகற்றிவிட்டு, புதிய லென்ஸ் வைப்போம்.  அதற்கு முன் பயோமெட்ரிக் டெஸ்ட் செய்து, சம்பந்தப்பட்ட நபருக்கு எத்தகைய லென்ஸ் பொருத்தமாக இருக்கும் என்று பார்த்து வைப்போம். 

உங்கள் கேள்விகளை கமென்ட் பகுதியில் பகிர்ந்துகொள்ளுங்கள்; அதற்கான பதில்கள் தினமும் விகடன் இணையதளத்தில் #DoctorVikatan என்ற பெயரில் வெளியாகும்.    

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *