
திண்டுக்கல்லில் பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆகிய 2 ரவுடி கும்பல்களுக்கிடையே மோதல் காரணமாக பட்டறை சரவணன் கொலை செய்யப்பட்டார். அதன் பின்பு பட்டறை சரவணன் கும்பலுக்கும், அல்லா ஆசிக் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாகத் தொடர் கொலைகள் நடைபெற்றன.
மேலும், ரவுடிகளுக்கிடையே மோதல் காரணமாகத் தொடர் கொலைகளைத் தடுப்பதற்காக ஏற்கனவே, கொலை செய்யப்பட்ட பட்டறை சரவணன், அல்லா ஆசிக் ஆதரவாளர்களைத் தொடர்ந்து காவல்துறையினர் தங்களது கண்காணிப்பில் வைத்து கண்காணித்து வந்தனர்.
இந்த நிலையில், திண்டுக்கல் குமரன் திருநகரைச் சேர்ந்த யோகேஸ்வரன் (25) என்ற இளைஞர், பட்டறை சரவணன் புகைப்படங்களை ஹீரோவாக சித்தரித்து சமூக வலைத்தளங்களில் வீடியோ ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.
இந்த இன்ஸ்டாகிராம் பதிவு திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவியது. உடனடியாக காவல்துறையினர் வீடியோ பதிவிட்ட யோகேஸ்வரனை வன்முறையைத் தூண்டும் விதத்தில் சமூக வலைத்தளத்தில் வீடியோ பதிவிட்ட குற்றத்திற்காகக் கைது செய்தனர்.
மேலும் குற்றச் செயல்கள் நடைபெறாமல் தடுப்பதற்காகவும் மேலும், இதுபோன்று இளைஞர்கள் யாரும் சமூக வலைத்தளங்களில் வீடியோ பதிவிடக் கூடாது என்பதற்காக யோகேஸ்வரனை வைத்து, ‘இனி இது போன்ற வீடியோ பதிவுகள் சமூக வலைத்தளங்களில் பதிவு செய்ய மாட்டேன்’ எனக் கூறும் மற்றொரு வீடியோ ஒன்றை காவல்துறையினர் எடுத்து வெளியிட்டுள்ளனர்.
மேலும் காவல்துறையினர் கைது செய்யப்பட்ட யோகேஸ்வரனை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.