
சென்னை ராயப்பேட்டையில் மேன்சன் நடத்தி வரும் தேவாவுக்கு (ரஜினிகாந்த்), தனது நண்பன் ராஜசேகர் (சத்யராஜ்), விசாகப்பட்டினத்தில் மரணமடைந்திருப்பது தெரிய வருகிறது. இறுதி அஞ்சலி செலுத்த அங்கு செல்லும் தேவாவுக்கு, ராஜசேகரின் மரணம், இயற்கையானதல்ல என்பது புரிகிறது. அதற்கு, கடத்தல் தொழில் உள்ளிட்ட சமூக விரோத செயல்களில் ஈடுபடும் சைமனும் (நாகார்ஜுனா) அவனுடைய வலது கை, தயாளனும் (சவுபின் சாஹிர்) காரணமாக இருக்கிறார்கள். அவர்களைத் தேவா என்ன செய்கிறார்? தேவாவுக்கும் ராஜசேகருக்கும் என்ன தொடர்பு, சைம
னுக்கும் தேவாவுக்குமான முன் கணக்கு என்ன? என்பது கதை.
ஒரு கமர்ஷியல், ஆக் ஷன் மசாலா படத்துக்கு என்னவெல்லாம் தேவையோ, அது அனைத்தையும் பக்காவாக கலந்து, தனது முந்தைய படங்களைப் போலவே ‘கூலி’யையும் கொடுத்திருக்கிறார், இயக்குநர் லோகேஷ் கனகராஜ். லாஜிக்கைதூர வைத்துவிட்டு, அவர் படங்களில் வரும் ரசனையான பழைய ஹிட் பாடல்கள், மிரட்டலான சண்டைக் காட்சிகள், ஏராளமான துணை நடிகர்கள், முன் பின்னான கதை சொல்லல் என இதிலும் தொடர்கிறது, அதே லோகேஷ் ஸ்டைல்.