
கடநத 2014-ம் ஆண்டு பத்தாம் வகுப்பு படித்துக் கொண்டிருந்தாள் அந்த கேரள சிறுமி. இவரின் சித்தி மகள் நடிகை மீனு குரியன் (Meenu kuriyan). பள்ளி விடுமுறையிலிருந்த சிறுமியை நடிகை, கேரளாவிலிருந்து சென்னை அண்ணாநகருக்கு அழைத்து வந்திருந்தார். அப்போது சிறுமியை சினிமாவில் நடிக்க வைப்பதாக நடிகை மீனு குரியன் கூறியதாக தெரிகிறது. அதையொட்டி சிறுமியை அண்ணாநகர் பகுதியில் உள்ள ஹோட்டலுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார் நடிகை மீனு குரியன். அங்கு நடிகைக்குத் தெரிந்த 5 பேர் வந்திருந்தனர். அவர்களிடம் சிறுமிக்கு நடிக்க வாய்ப்பு கேட்டிருக்கிறார் நடிகை . அப்போது அந்த 5 பேரில் ஒருவர், சிறுமியின் கன்னத்தை கிள்ளியிருக்கிறார். இன்னொரு நபர், சிறுமியைக் கட்டிப்பிடித்து முத்தம் கொடுத்திருக்கிறார். இவர்களின் இந்த பாலியல் டார்ச்சரால் அதிர்ச்சியடைந்த சிறுமி, அங்கிருந்து வெளியேறியிருக்கிறார். இநதச் சம்பவம் நடக்கும் போது அவர் சிறுமி என்பதால் தைரியமாக காவல் நிலையத்தில் புகாரளிக்கவில்லை
. இதையடுத்து தற்போது சிறுமிக்கு திருமணமான நிலையில் தனக்கு 2014-ம் ஆண்டு சித்தி மகளான தன்னுடைய சகோதரி நடிகை மீனு குரியன் அறிமுகப்படுத்தியவர்களால் நடந்த பாலியல் டார்ச்சர் குறித்து குடும்பத்தினரிடம் கூறி கதறி அழுதிருக்கிறார். இதுகுறித்து கடந்த 2024 -ம் ஆண்டு எர்ணாகுளம் மூவாட்டு புழா காவல் நிலையத்தில் அவர் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரித்தனர். சம்பவம் நடந்த இடம் சென்னை அண்ணாநகர் என்பதால் இந்த வழக்கு கேரளாவிலிருந்து சென்னை திருமங்கலம் அனைத்து மகளிர் காவல் நிலையத்துக்கு மாற்றப்பட்டது. அதனால் போலீஸார் புதிதாக வழக்குப்பதிந்து புகார் கொடுத்த பெண்ணிடம் விசாரித்தனர். அவர் அளித்த தகவலின்படி இன்ஸ்பெக்டர் சுப்புலட்சுமி தலைமையிலான போலீஸார், கேரளாவுக்குச் சென்று பாலியல் டார்ச்சருக்கு காரணமாக இருந்த நடிகை மீனு குரியனை கைது செய்து சென்னைக்கு அழைத்து வந்தனர். பின்னர் விசாரணைக்குப்பிறகு நடிகை மீனு குரியன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார்.