
நவ.2 கல்லறை திருநாளன்று நடைபெறும் என அறிவித்துள்ள ஆசிரியர் தகுதித் தேர்வு தேதியை மாற்றி, வேறு ஒரு தேதியில் நடத்த வேண்டும் என கிறிஸ்தவ நல்லெண்ண இயக்கத் தலைவரும், திருச்சி கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான இனிகோ இருதயராஜ், தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தமிழக முதல்வருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில் தெரிவித்துள்ளது: உலகெங்கும் வாழும் கிறிஸ்தவர்கள், இறந்த தங்களின் முன்னோர்களின் ஆன்மாவுக்காக பிரார்த்தனை செய்யும் தினமாக ஒவ்வொரு ஆண்டும் நவ.2-ம் தேதியை கல்லறைத் திருநாளாக அனுசரித்து வருகின்றனர். அந்நாளில் தங்கள் குடும்பங்களில் இறந்தவர்கள் அல்லது தங்களின் அன்புக்குரியவர்களின் கல்லறைகள் எங்கு இருக்கிறதோ அந்த ஊர்களுக்கு சென்று கல்லறையை சுத்தம் செய்து, மலர்களால் அலங்கரித்து, மெழுகுவத்திகள் ஏற்றில இறந்தவர்களின் ஆன்மா சாந்தி அடைய ஜெபம் செய்வது வழக்கம்.