
சென்னை: “அதிகாரத்தில் உள்ளவர்களின் ஆசியுடன் சக்திபடைத்தவர்கள் செயல்படுவதால் தமிழகத்தில் போதைப்பொருள் விநியோகத்தைக் கட்டுப்படுத்துவது மிகவும் கடினமாகிறது” என்று ஆளுநர் ஆர்.என்.ரவி குற்றம் சாட்டியுள்ளார்.
சுதந்திர தினத்தை முன்னிட்டு ஆளுநர் ஆர்.என்.ரவி ஆற்றிய உரை: “நமது தேசத்தின் சிறப்புமிக்க 79-ஆவது சுதந்திர தின கொண்டாட்டத்தையொட்டி, உங்கள் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். முதலில், நீண்டகால ஒடுக்குமுறை காலனித்துவ ஆட்சியிலிருந்து நமக்கு சுதந்திரம் பெற்றுத்தந்த தமிழ்நாட்டைச் சேர்ந்த பல்லாயிரக்கணக்கானோர் உள்பட அனைத்து சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், தியாகிகளுக்கும் எனது நெஞ்சார்ந்த அஞ்சலியை செலுத்திக் கொள்கிறேன்.