
டெல்லியில் 6 வயது குழந்தை தெரு நாய் கடித்து உயிரிழந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது.
டெல்லியில் தெரு நாய்கள் பிரச்சினை நீண்ட காலமாக விவாதிக்கப்பட்டது. அதிகரித்து வரும் நாய்க்கடி மற்றும் அதன் தாக்குதல் சம்பவங்கள் மக்களை கவலையடையச் செய்திருந்தன.
உச்ச நீதிமன்றம் இந்தப் பிரச்னையை மிகவும் தீவிரமாகக் கருதி, தானாக முன் வந்து இந்த வழக்கை விசாரித்தது.
10 லட்சம் தெரு நாய்களுக்கு கருத்தடை ஊசி போட்டு, அவற்றை காப்பகங்களில் அடைக்க வேண்டும் என்று தீர்பளித்திருந்தது.
உச்ச நீதிமன்றத்தின் இந்தத் தீர்ப்பிற்கு விலங்குகள் நல ஆர்வலர்கள், நடிகர், நடிகைகள் உள்ளிட்ட சிலர் எதிர்ப்பு தெரிவித்திருந்தனர்.
இதனிடையே இந்த வழக்கை மூன்று நீதிபதிகள் அமர்வுக்கு உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி மாற்றி உத்தரவிட்டிருந்தார்.
இந்நிலையில் இன்று உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பில் தெரு நாய்களைக் காப்பகங்களில் அடைப்பதற்கு எதிராக தாக்கல் செய்யபட்ட வழக்கில் அனைத்து தரப்பினரும் எழுத்து பூர்வமாக வாதங்களைத் தாக்கல் செய்ய உத்தரவிட்டு உச்ச நீதிமன்றம் தீர்ப்பை ஒத்தி வைத்திருக்கிறது.

இந்நிலையில் விலங்கு நல ஆர்வலர் மற்றும் பாஜக முன்னாள் எம்.பி. மேனகா காந்தியின் சகோதரி அம்பிகா சுக்லா, “நாய் கடித்ததும் சோப்பு வைத்து கழுவினாலே ரேபிஸ் வைரஸ் இறந்துவிடும்.
அதனால்தான் கோடிக்கணக்கானோர் வாழும் இந்நாட்டில் ரேபிஸ் மரணம் வெறும் 54 ஆக இருக்கிறது. நியாயமாகக் கூற வேண்டுமானால், ஒரு நாய் எந்த அளவுக்கு கடிக்குமோ, அந்த அளவுக்கு கடிக்கவில்லை” என்று கூறியிருக்கிறார். அவரின் இந்த கருத்து சர்ச்சையைக் கிளப்பி இருக்கிறது.