• August 14, 2025
  • NewsEditor
  • 0

கிருஷ்ண பக்தர்கள் கொண்டாட்டத்தோடு வழிபடும் நாள் கோகுலாஷ்டமி. கண்ணன் சிறையில் தேவகிக்கும் வசுதேவருக்கும் மகனாக அவதரித்து அந்த இரவிலேயே கோகுலத்துக்கு மாற்றப்பட்ட நாள் அது என்பதால் மிகவும் உயர்வாகக் கருதப்படுகிறது. பகவான் விஷ்ணுவின் அவதாரங்களில் தனித்துவம் வாய்ந்ததும் அனைவருக்கும் பிரியமானதும் ஆனது கிருஷ்ணாவதாரம். பகவான் கிருஷ்ணரை முழுமனதோடு நம்பித் தொடங்கும் செயல்கள் அனைத்தும் வெற்றிபெறும் என்பது நம்பிக்கை. எங்கே கிருஷ்ணரின் சாந்நித்தியம் இருக்கிறதோ அங்கே மகிழ்ச்சியும் செல்வமும் நிறைந்திருக்கும். எனவேதான் அந்த கண்ணனை நம் வீட்டுக்கு அழைக்கும் திருநாளாக கோகுலாஷ்டமியைக் கோலாகலமாகக் கொண்டாடுகிறோம்.

ராதே கிருஷ்ணர்

உலக அளவில் கிருஷ்ண பக்தர்களை ஒருங்கிணைக்கும் அமைப்பு இஸ்கான் (ISKCON.) உலகம் முழுவதும் பகவான் கிருஷ்ணருக்கு ஆலயம் எழுப்பி கிருஷ்ண பக்தியைப் பரப்பி வருகிறார்கள் இந்த அமைப்பினர். சென்னையில் ஈசிஆர் சாலையில் பிரமாண்டமாக கிருஷ்ணர் ஆலயம் ஒன்று இஸ்கான் அமைப்பினரால் அமைக்கப்பட்டுள்ளது. இந்த ஆலயத்தில் ஆண்டுதோறும் கோகுலாஷ்டமி கோலாகலமாகக் கொண்டாடப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு கொண்டாட்டங்கள், ஆகஸ்ட் 15- ம் தேதி முதல் தொடங்குகின்றன.

இந்த மூன்று நாள்களும் பக்திப் பரவசமூட்டும் பஜனைகள், அபிஷேக வழிபாடுகள், எழில்மிகு ஆரத்திகள், சிலிர்ப்பூட்டும் உபந்யாசங்கள் ஆகியன நடைபெற இருக்கின்றன. இந்த நிகழ்வுகளில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு, பகவானின் அருளைப் பெறுவார்கள் என்று நம்பப்படுகிறது.

இந்த வைபவத்தின் மிக முக்கிய நிகழ்வு ஆகஸ்ட் 16 – ம் தேதி நடைபெறும் மகா அபிஷேகமும் மகா ஆரத்தியும்தான். இந்த நிகழ்வு 16 – ம் தேதி இரவு 12 மணிக்கு நடைபெறும். கிருஷ்ணர் பிறந்தது நள்ளிரவு வேளை என்பதால் அந்த நாளிலேயே இந்த ஆராதனைகள் நடைபெற இருக்கின்றன.

சிலிர்ப்பூட்டும் இந்த நாளின் வழிபாடுகளில் கலந்துகொள்ள இஸ்கான் பக்தர்களை அன்புடன் அழைக்கிறது. கோகுலாஷ்டமி இரவில் நடைபெறும் மகா அபிஷேக ஆராதனைகளை சக்தி விகடன் யூட்யூப் மற்றும் முகநூல் பக்கத்தில் ஆகஸ்ட் 16 இரவு 10 மணி முதல் தரிசிக்கலாம்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *