• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே நள்ளிரவில் தூய்மைப் பணியாளர்கள் குண்டுக்கட்டாக கைது செய்யப்பட்ட போது, ரோம் நகரம் பற்றி எறியும் போது பிடில் வாசித்த நீரோ மன்னனைப் போல முதல்வர் ஸ்டாலின் படம் பார்த்து மகிழ்ந்திருக்கிறார் என எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றனர். முதலமைச்சர் ‘கூலி’ படத்தை பார்த்ததாக சொல்லப்பட்ட சமயத்தில் ரிப்பன் மாளிகையில் சூழல் எப்படியிருந்தது? என களத்திலிருந்து பார்த்தவற்றை இங்கே பகிர விரும்புகிறேன்.

CM Stalin

இரவு 10:47 மணியளவில் கூலி படத்தைக் கண்டுகளித்ததற்காக முதல்வர் ஸ்டாலினுக்கு நன்றி சொல்லி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் புகைப்படத்தோடு ஒரு ட்வீட் செய்திருந்தார். இந்த ட்வீட் வெளியாவதற்கு முன்பாகவே முதலமைச்சர் ‘கூலி’ படத்தின் சிறப்புக்காட்சியை பார்த்துக் கொண்டிருக்கிறார் என்கிற தகவல் வெளியாகிவிட்டது. 7:30 மணிக்கு மேலிருந்தே, ‘MRC நகரிலுள்ள ஆளும்கட்சியின் உறவுக்காரர்களின் சேனல் அலுவலகத்தில் முதலமைச்சர் கூலி படத்தை பார்த்து வருகிறார்.’ என்கிற தகவல் பரவத் தொடங்கிவிட்டது.

சில செய்தி சேனல்கள் MRC நகரில் தங்களின் யூனிட்டையும் போட்டிருந்தனர். ஆக, 7 மணிக்கு மேலாக ஒரு சமயத்தில்தான் முதல்வர் கூலி படத்தை பார்த்திருக்கிறார் என அனுமானித்துக் கொள்ளலாம். அந்த சமயத்தில்தான் ரிப்பன் மாளிகை நள்ளிரவு கைதுக்காகவும் தயாராகிக் கொண்டிருந்தது.

Ripon Building
Ripon Building

5 மணியிலிருந்து 7 மணிக்குள் காவல்துறை தூய்மைப் பணியாளர்களை ரொம்பவே நெருக்கியது. நீங்கள் எப்போது வேண்டுமானாலும் கைது செய்யப்படலாம் என்கிற தகவலை காவல்துறை போராட்டக்குழுவுக்கு கடத்தியிருந்தது. இதனைத் தொடர்ந்து ரிப்பன் மாளிகை முன்புள்ள ஈ.வெ.ரா.பெரியார் சாலையும் ராஜா முத்தையா சாலையும் முழுமையாக ப்ளாக் செய்யப்பட்டது. 30 க்கும் மேற்பட்ட காலி பேருந்துகள் கைதுக்காக ஸ்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டு போராட்ட இடத்துக்கு நெருக்கமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்தது.

ரிப்பன் மாளிகை ஏரியாவில் உச்சக்கட்ட பதற்றம் தொற்றிக் கொண்டது. ஆனால், காவல்துறைக்கு கைது செய்வதில் ஒரு தயக்கம் இருந்தது. அதுவும் பீக் ஹவரில் கை வைத்து தவறானால் டேமேஜ் அதிகமாகிவிடும் என்பதால் 7 மணிக்கு மேல் கொஞ்சம் இலகுவாகினார். ப்ளாக் செய்யப்பட்ட சாலைகள் திறந்துவிடப்பட்டன. அடுத்த 2-3 மணி நேரத்துக்கு பெரிதாக நெருக்கடி இல்லை. மெயின் கேட்டை மட்டும் அவ்வபோது மூடுவதும் திறப்பதுமாக இருந்தனர். சில சமயங்களில் பெண்களை கழிவறைக்கு அனுமதிக்க மறுத்தனர். ஆனாலும் 5-7 மணி வரை இருந்த உளவியல் நெருக்கடி இந்த சமயத்தில் இல்லை.

Ripon Building
Ripon Building

இந்த சமயத்தில்தான் MRC நகரிலுள்ள தனியார் சேனல் அலுவலகத்தில் கூலி படம் பார்த்துக் கொண்டிருப்பதாக தகவல் வெளியானது. போராட்டக்குழுவுக்கும் இந்த அரசல் புரசலான தகவல் சென்றது. இதனைத் தொடர்ந்துதான், ‘முதல்வரே…முதல்வரே கூலி படம் பார்த்தாச்சா…’ என போராட்டக்குழுவினர் கோஷம் எழுப்ப ஆரம்பித்தனர். 10 மணிக்கு மேல் சூழல் மீண்டும் நெருக்கடியானது. பெண் காவலர்களுக்கு போராட்டத்தில் ஈடுப்பட்டிருக்கும் பெண்களை எப்படி அப்புறப்படுத்த வேண்டும் என அறிவுரை வழங்கப்பட்டது.

அமைச்சர் சேகர் பாபு, மேயர் பிரியா மற்றும் அதிகாரிகள் ரிப்பன் மாளிகைகளுக்குள் கைது நடவடிக்கையை எப்படி செயல்படுத்தலாம் என கடைசிக்கட்ட ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்த சமயத்தில்தான் மாநகராட்சி தரப்பிலிருந்து செய்தித் தொடர்பாளர் மூலம் ஒரு தகவல் சொல்லப்பட்டது. அதாவது, அமைச்சர் சேகர் பாபு மற்றும் மேயர் பிரியா இருவரும் பத்திரிகையாளர்களை சந்திப்பார்கள் ஊடகங்கள் தயாராக இருங்கள் என அதிகாரப்பூர்வமாக சொல்லப்பட்டது. ரிப்பன் மாளிகையின் உள் கட்டிடத்தின் வாசலில் செய்தியாளர்கள் மைக்கை போட்டுவிட்டு சேகர் பாபுவின் வருகைக்காக காத்திருந்தனர்.

Sekar Babu
Sekar Babu

சேகர் பாபு 11:30 மணிக்கு மேல்தான் மீட்டிங்கை முடித்துவிட்டு கீழிறங்கி வந்தார். ஒரு கட்டம் வரைக்கும் பத்திரிகையாளர்களை நோக்கி வந்தவர், திடீரென டைவர்ட் ஆகி கார் பக்கமாக சென்றார். ‘சார்…சார்…ஒரே ஒரு கேள்வி…நிலைமை கையை மீறி போகுதா…’ என சேகர் பாபுவின் பதிலை வேண்டி செய்தியாளர்கள் உரத்த குரலில் கேள்விகளை எழுப்பினர். அவர் எதையும் காதில் வாங்கவில்லை. அவ்வளவுதான் என கையை உதறிவிட்டுச் சென்றார். சேகர் பாபுவின் கார் ரிப்பன் மாளிகையை விட்டு வெளியேறிய அடுத்த 5 நிமிடங்களில் காவல்துறையின் படை மொத்தமாக இறக்கப்பட்டு கைது நடவடிக்கையை தொடங்கிவிட்டார்கள். அரைமணி நேரத்தில் மொத்தமாக அந்த இடத்திலிருந்த அத்தனை பேரையும் காலி செய்துவிட்டார்கள். போராட்டக்குழுவினர் மிக உறுதியாக இருந்தனர்.

பெரும்பாலானோர் பெண்கள். 40 வயதைக் கடந்தவர்கள். வாயிலும் வயிற்றிலும் அடித்துக் கொண்டு எங்க வாழ்வாதாரத்தைதானே கேட்டோம். ஏன் எங்களோட வயித்துல அடிக்கிறீங்க? நாங்க என்ன தீவிரவாதியா? எதுக்கு இவ்வளவு போலீஸ்? நீங்க கொடுத்த வாக்குறுதியைத்தானே கேட்டோம். அதுக்கே இப்டியா? என கொந்தளித்து கண்ணீரும் கம்பளையுமாக பெண்கள் நின்றனர். சிலர் மயக்கம் போட்டு விழுந்தனர். முரண்டு பிடித்த பெண்களையும் ஆண்களையும் வலுக்கட்டாயமாக தரதரவென இழுத்து பேருந்துகளில் ஏற்றினார்கள். கண்ணீர் தேசமாக அந்த சாலை மாறியது. அரைமணி நேரத்தில் எல்லாம் முடிந்து நிசப்தமானது. போராட்டக்காரர்களின் தடயமே இருக்கக்கூடாது என்பதற்காக அடுத்த பத்தே நிமிடத்தில் சாலையையும் ப்ளாட்பார்மையையும் தூய்மைப் பணியாளர்களை கொண்டே சுத்தம் செய்து ப்ளீச்சிங் பவுடர் தூவினர். எந்த நாற்றத்தை போக்க அந்த ப்ளீச்சிங் பவுடர்? திராவிட மாடல், சமூக நீதி…சமூக நீதி என மூச்சுக்கு முந்நூறு தடவை பேசிவிட்டு, கொடுத்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் எளியோர் மீது அடக்குமுறையை கட்டவிழ்க்கும் இந்த அரசின் மீதான நாற்றத்தை போக்கவா?

ஸ்டாலின்
ஸ்டாலின்

ரிப்பன் மாளிகையின் முன்பு இத்தனை களேபரங்களும் நிகழ்த்தப்படுவதற்கான ஆயத்தங்கள் செய்யப்பட்டுக் கொண்டிருந்த சமயத்தில்தான் முதல்வர் கூலி படம் பார்த்துக் கொண்டிருக்கிறார் என்ற தகவல் வெளியானது. போர்க்களம் போல ரிப்பன் மாளிகை மாறிக்கொண்டிருந்த சமயத்தில் நீங்கள் கூலி படத்தை பார்த்த அந்த புகைப்படம் வெளியானது. இந்த காரியத்தை யாரும் அவ்வளவு எளிதாக மறந்துவிட மாட்டார்கள் முதல்வரே!

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *