• August 14, 2025
  • NewsEditor
  • 0

தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாக சென்னை மாநகராட்சி அலுவலகம் ரிப்பன் மாளிகைக்கு முன்பு போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவு வலுக்கட்டாயமாகக் கைதுசெய்தனர்.

ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க அரசின் இத்தகைய செயலுக்கு அரசியல் கட்சிகள் கண்டனம் தெரிவித்து வருகின்றன.

இந்த நிலையில், வி.சி.க தலைவரும் நாடாளுமன்ற உறுப்பினருமான தொல். திருமாவளவன், தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தில் தனது நிலைப்பாடு குறித்து விளக்கியிருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் கைது

பெரம்பலூரில் செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய திருமாவளவன், “காவல்துறை நேற்று நள்ளிரவு தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்கு ஆதரவாகக் களத்தில் நின்ற பல்வேறு அமைப்புகளைச் சேர்ந்தவர்களையும் கைதுசெய்திருக்கிறார்கள். இது வேதனைக்குரியது.

இத்தகைய சூழலில் இன்று முதலமைச்சர் தலைமையில் அமைச்சரவை கூடி, தூய்மைப் பணியாளர்களுக்குத் திட்டங்கள் அறிவித்திருக்கிறார்கள். வி.சி.க சார்பில் இந்த அறிவிப்புகளை வரவேற்கிறோம்.

அதேநேரத்தில் தனியார்மயமாவதை ஒருபோதும் நாங்கள் வரவேற்பதில்லை. தனியார்மயம் என்பது அரசின் கொள்கை முடிவாக இருந்தாலும்கூட, அகில இந்திய அளவில் நடைமுறையில் இருந்தாலும்கூட இது ஏற்புடையதல்ல என்பது எங்களின் நிலைப்பாடு.

தனியார்மயப்படுத்துவது என்ற முயற்சியை முதல்வர் மறுபரிசீலனை செய்ய வேண்டும். NULM திட்டத்தின் கீழ் அவர்களைப் பணியாற்ற அனுமதிக்க வேண்டும். தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவாகப் போராடியவர்கள்மீது தொடுக்கப்பட்ட வழக்குகளைத் திரும்பப் பெற்று விடுதலை செய்ய வேண்டும்.

எந்தத் துறையாக இருந்தாலும் அந்தத் துறையில் ஒப்பந்த பணியாளர்களாக பணியாற்றக் கூடியவர்களை அரசு ஊழியர்களாக மாற்ற வேண்டும் என்பதுதான் சரியானது. அதுதான் எங்களின் நிலைப்பாடு, கோரிக்கை.

விசிக தலைவர் திருமாவளவன்
விசிக தலைவர் திருமாவளவன்

பன்னாட்டு வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட நாளிலிருந்து அரசுப் பணியாளர்களை நாளுக்கு நாள் குறைக்க வேண்டும், புதிதாக அரசு ஊழியர்கள் நியமனம் செய்யக் கூடாது, அனைத்து துறைகளைச் சார்ந்த பணிகளையும் தனியார் மையப்படுத்த வேண்டும் என்கிற கொள்கை முடிவை இந்திய ஒன்றிய அரசு எடுத்திருக்கிறது.

காங்கிரஸின் நரசிம்மராவ் ஆட்சிக் காலத்திலேயே அந்த ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட்டிருக்கிறது.

இந்தத் தனியார்மயமாதல் என்பது இந்திய அரசின் கொள்கையாக உள்ளது.

அரசு ஊழியர்கள் புதிதாக நியமிக்கப்படக் கூடாது என்ற நிலைப்பாடு பெருகியிருக்கிறது. ஒவ்வொரு துறையாக தனியார்மயப்படுத்தி வருகிறார்கள். அதில் இதுவும் ஒன்று.

எனவே, ஒட்டுமொத்தத்தில் தனியார்மயப்படுத்துதலை கைவிட வேண்டும். மீண்டும் முதலமைச்சரைச் சந்திக்கும்போது தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கையை மறுபரிசீலனை செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்துவோம்.

பணி நிரந்தரம் தொடர்பாகத் தேர்தல் அறிக்கையில் வாக்குறுதி கொடுத்திருக்கிறாரா என்று தெரியவில்லை.

தேர்தல் அறிக்கையில் சொல்லியிருந்தாலும், சொல்லாவிட்டாலும் அவர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதுதான் எங்களின் கருத்து. யாரையும் ஒப்பந்த பணியாளர்களாக வைத்திருக்கக் கூடாது.

மற்ற துறைகளில் பணியாற்றக் கூடிய அரசு ஊழியர்களைவிடவும் கடினமான பணியைச் செய்யக்கூடிய, எளிதில் நோய்த்தொற்றுக்குள்ளாகக்கூடிய இவர்களை அரசு ஊழியர்களாக்கி அவர்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதிப்படுத்துவது தான் ஒரு அரசாங்கத்தின் மிக முக்கியமான கடமையாக இருக்க வேண்டும்.

அவர்களைத் தனியாரிடம் ஒப்படைத்துப் பார்த்துக் கொள்ளுங்கள் என்பது ஏற்புடையதல்ல” என்று கூறினார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *