
சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்கள் காத்திருப்பு போராட்டம் நடத்திய தூய்மைப்பணியாளர்களை, நீதிமன்ற தீர்ப்பைத் தொடர்ந்து நேற்றிரவு கைது செய்தது காவல்துறை.
தமிழக அரசின் இந்த நடாவடிக்கைக்கு பெருமளவில் விமர்சனங்கள் எழுந்துள்ளன. அந்த வகையில் திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு மாநில கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை காவல்துறையின் நடவடிக்கைகள் ‘வேதனை அளிப்பதாகக்’ கூறியிருக்கிறார்.
“தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும்”
இதுகுறித்து அவர் வெளியிட்ட அறிக்கையில், “நேற்று இரவு தூய்மைப் பணியாளர்களை நீதிமன்ற உத்தரவின் பேரில் அப்புறப்படுத்தியிருப்பது வேதனையளிக்கிறது. நீதிமன்றம் கூறினாலும் கூட காவல்துறை தாயுள்ளத்தோடு அணுகியிருக்க வேண்டும்.” எனக் கூறியுள்ளார்.
“சுமூக தீர்வு காண வேண்டுகிறேன்”
அத்துடன், “தூய்மைப் பணியாளர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். அவர்கள் கைது செய்யப்பட்டிருப்பது வருத்தமளிக்கிறது.
கடைக்கோடி பணியில் இருக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு ஆதரவுக் கரம் அளித்து அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தவும், கைது செய்யப்பட்டுள்ள தூய்மைப் பணியாளர்களையும், அவர்களுக்காக போராடிய ஜனநாயக சக்திகளையும் விடுவிக்க மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் இப்பிரச்சினையில் நேரடியாக தலையிட்டு சுமூக தீர்வு காண வேண்டுகிறேன்.” என்றும் கோரிக்கை வைத்திருக்கிறார்.