
செப்டம்பர் முதல் வாரத்தில் புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஜெர்மனி, இங்கிலாந்து உள்ளிட்ட நாடுகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 7 மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், தமிழக அரசின் செயல்பாடுகள் தீவிரமாக்கப்பட்டுள்ளன.
ஏற்கனவே உங்களுடன் ஸ்டாலின், நலம் காக்கும் ஸ்டாலின் உள்ளிட்ட திட்டங்கள் மக்கள் மத்தியில் வரவேற்பை பெற்றுள்ள நிலையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தமிழக அமைச்சரவைக் கூட்டம் இன்று காலை தொடங்கி நடந்து முடிந்திருக்கிறது. இந்த அமைச்சரவைக் கூட்டத்தில் பங்குகொண்டதற்குப் பிறகு, தமிழ்நாட்டின் நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு செய்தியாளர்களை சந்தித்துப் பேசினார்.
அப்போது, “தூய்மைப் பணியாளரின் நலவாழ்வில் திராவிட மாடல் அரசு மிகுந்த அக்கரைக் கொண்டிருக்கிறது. 2007-ல் கலைஞர் அரசின் போதுதான் தூய்மைப் பணியாளர்களுக்கான நலவாரியம் தொடங்கப்பட்டு சிறப்பாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதல்வர் ஸ்டாலின் இந்தப் பாரம்பரியத்தை தொடர்ந்து பின்பற்றி வருகிறார்.
அரசு ஊழியர்களின் நலனில் முதல்வரின் அரசு பெருங்கருணையுடன்தான் இருக்கிறது. அரசு ஊழியர்கள் பணியில் இருக்கும்போது, உயிரிழந்தால் அவர்களுக்கான விபத்து காப்பீட்டுத் தொகை வருவாய் கோட்டாட்சியர் முதல் அங்கன்வாடி பணியாளர் குடும்பம் என அனைவருக்கும் ரூ.1 கோடி வழங்கப்படும் என்ற அறிவிப்பு செயல்படுத்தப்பட்டு வருகிறது.
அதன் அடிப்படையில், முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திவிராவிட மாடல் அரசு, எப்போதும் தூய்மைப் பணியாளர்களின் நலனில் அக்கரை செலுத்துகிறது. இன்று நடந்த அமைச்சரவைக் கூட்டத்தில்கூட 6 திட்டங்களை அரசு அறிவித்திருக்கிறது.
1. தூய்மை பணியாளர்கள் குப்பையைக் கையாளுவதால் அவர்களுக்கு நுரையீரல், தோல் சம்பந்தமான நோய்களால் பாதிக்கப்படுவதற்கு அதிக வாய்ப்புள்ளது. எனவே தொழில் சார்ந்த நோய்களை கண்டறிவதற்கும், சிகிச்சையளிப்பதற்கும் தேவையான தனித்திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
2. தற்போது தூய்மைப் பணியாளர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால், அவர்களுக்கு தூய்மைப் பணியாளர்கள் நல வாரியத்தின் மூலம் நிதியுதவி வழங்கப்பட்டு வருகிறது. தூய்மைப் பணியாளர்களின் குடும்பத்தின் எதிர்காலத்தை கவனத்தில் கொண்டு, அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்ய அரசு முடிவு செய்திருக்கிறது. அதற்காக நலவாரியம் வழங்கும் நிதியுதவியுடன் கூடுதலாக ரூ.5 லட்சம் மதிப்பிலான காப்பீடு இலவசமாக வழங்கப்படும். இதனால் பணியின்போது இறக்க நேரிடும் தூய்மை பணியாளரின் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் கிடைக்கும்.
3. தூய்மைப் பணியாளர்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தினர்களின் சமூக பொருளாதாரத்தை உயர்த்திட, சுயதொழில் தொடங்கும் பொழுது, அவர்களின் தொழில் தொடங்குவதற்கு நிதியுதவியாக 35% நிதி. அதிகபட்சமாக ரூ.3.5 லட்சம் வரை மானியமாக வழங்கப்படும். இந்த கடன் மூலம் தொழில் தொடங்கி கடனை சரியாக செலுத்திவந்தால், 6 சதவிகித வட்டி மானியம் வழங்கப்படும். இந்த புதிய திட்டத்திற்கு ஆண்டுதோறும் ரூ.10 கோடி ஒதுக்கீடு செய்யப்படும்
4. தூய்மைப் பணியாளர்களின் குழந்தைகள் எந்த பள்ளியில் படித்தாலும் அவர்களின் உயர்கல்வி கட்டணச் செலவு மட்டுமின்றி விடுதி, புத்தகக் கட்டணம் வழங்கிடும் புதிய உயர்கல்வி உதவித்தொகை திட்டம் ஒன்று செயல்படுத்தப்படும்.
5. நகர்ப்புறங்களில் சொந்த வீடு இல்லாத தூய்மைப் பணியாளர்களுக்கு, அடுத்த மூன்று ஆண்டுகளில் தூய்மைப்2 பணியாளர் நல வாரியம், தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், தமிழ்நாடு நகர்புற மேம்பாட்டு வாரியத் திட்டம் ஆகியவற்றின் உதவியுடன் தூய்மைப் பணியாளர்கள் வசிக்கும் இடத்திலேயே வீடு கட்டுதல் எனப் பல்வேறு முறைகளின் கீழ் 30 ஆயிரம் குடியிருப்புகள் கட்டித் தரப்படும். கிராமப்புறங்களில் வசிக்கும் தூய்மைப் பணியாளர்களுக்கு கலைஞர் கனவு இல்லம் திட்டத்தின் கீழ் இந்த வீடு ஒதுக்கீட்டுக்கு முன்னுரிமை வழங்கப்படும்.
6. தூய்மைப் பணியாளர்கள் தங்கள் பணியை அதிகாலையிலேயே தொடங்கவேண்டுமென்பதால், காலை உணவு சமைப்பதற்கும், அதை பணிபுரியும் இடத்துக்கு கொண்டு வந்து உண்பதற்கும் பல்வேறு பிரச்னைகளை எதிர்கொள்கின்றனர்.
இதற்கு தீர்வாக நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் பணியில் ஈடுபடும் பணியாளர்களுக்கு காலை உணவு உள்ளாட்சி அமைப்புகளால் இலவசமாக வழங்கப்படும். இத்திட்டம் முதற்கட்டமாக பெருநகர சென்னை மாநகராட்சியில் செயல்படுத்தப்பட்ட படிப்படியாக மற்ற நகரப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கும் விரிவுபடுத்தப்படும்.
தூய்மைப் பணியாளர்களின் உணர்வுகளை மதிக்கக்கூடிய முதலமைச்சராக, உங்களுக்கான நலத்திட்டங்களை உருவாக்கக் கூடிய முதல்வராக இருக்கிறார். உங்களின் மற்ற கோரிக்கங்களையும் மனதில் வைத்து உங்களுடைய வேலை நிறுத்தத்தை விடுத்து பணிகளுக்கு திரும்ப வேண்டும் என அரசின் சார்பில் அன்போடு கேட்டுக்கொள்கிறேன்.

தூய்மைப் பணியாளர்களின் பணி நிரந்தரம் தொடர்பான இரண்டு வழக்குகள் உயர் நீதிமன்றத்திலும், தீர்ப்பாயத்திலும் இருக்கிறது. அந்த வழக்கின் முடிவுகளுக்குப் பிறகு முடிவு செய்து கொள்ளலாம். அமைச்சர்கள், மேயர் என 12 கட்டப் பேச்சுவார்த்தை நடத்தியும் முடிவுக்கு வரமுடியவில்லை. அரசின் கதவு எப்போதும் பேச்சுவார்த்தைக்கு திறந்தே இருக்கிறது. இத்தனை நாள் போராட்டம் நடத்தினார்கள். பலவந்தமாக போராட்டத்தை கலைக்கவில்லை. இப்போதுகூட நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலேயே நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.