• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலை எதிர்த்தும், பணி நிரந்தரம் கோரியும் 13 நாள்களாகப் போராடி வந்த தூய்மைப் பணியாளர்களை நேற்று (ஆகஸ்ட் 13) நள்ளிரவில் போலீஸார் வலுக்கட்டாயமாகக் கைதுசெய்யப்பட்டதற்கு ஸ்டாலின் தலைமையிலான திமுக அரசின்மீது அரசியல் கட்சிகள் தங்களின் பதிவுசெய்து வருகின்றன.

அந்த வரிசையில், நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், “தூய்மைப்பணியாளர்கள் மீதான திமுக அரசின் கோர ஒடுக்குமுறை அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்! பாசிசத்தின் வெறியாட்டம்! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை ஆட்சியாளர்களே!” என அறிக்கை வெளியிட்டிருக்கிறார்.

தூய்மைப் பணியாளர்கள் கைது

அந்த அறிக்கையில் சீமான், “தங்களது வாழ்வாதார உரிமை கோரி, தனியார்மயத்துக்கு எதிராக சென்னை ரிப்பன் மாளிகை வாசலில் 13 நாட்களாக அறவழியில் போராடி வந்த தூய்மைப்பணியாளர்களை இரவோடு இரவாகக் குண்டுகட்டாகக் கைதுசெய்து, கொடும் தாக்குதல் தொடுத்து, தி.மு.க அரசு ஏவியிருக்கும் அடக்குமுறையானது அரசப்பயங்கரவாதத்தின் உச்சம்.

விளிம்பு நிலை மக்களின் நியாயமான கோரிக்கைகளை ஏற்க மறுத்து, அவர்கள்மீது பாய்ச்சப்பட்டுள்ள ஒடுக்குமுறையானது கடும் கண்டனத்திற்குரியது.

‘சமூக நீதி’ எனும் சொல்லாடலைத் தாங்கள்தான் பிரசவித்தது போல, மூச்சுக்கு முன்னூறு தடவை உச்சரிக்கும் முதல்வர் ஸ்டாலின் அவர்களே! அடித்தட்டு உழைக்கும் மக்களின் மீது அதிகார வலிமைக் காட்டி, அடக்கி ஒடுக்குவதுதான் சமூக நீதியா?

வாயிலும், வயிற்றிலும் அடித்துக் கொண்டு கதறியழும் எளிய மக்களின் கண்ணீரும், ஓலமும் உங்கள் கல்மனதைக் கரைக்க வில்லையா?

‘ஓரணியில் தமிழ்நாடு’ என்றீர்களே, மொத்த தமிழ்நாடும் தூய்மைப் பணியாளர்கள் பக்கம் நிற்கிறது. நீங்கள் எந்த அணியில் நிற்கிறீர்கள்?

‘உங்களுடன் ஸ்டாலின்’ என்றீர்களே, எங்கள் உழைக்கும் மக்களோடு நிற்க மறுத்து, தனியார் முதலாளிக்கு எதற்கு வெண்சாமரம் வீசுகிறீர்கள்?

சென்னை எனும் மாநகரத்தைத் தங்களது உழைப்பினால் உருவாக்கியது; உருமாற்றியது ஆதித்தொல்குடி மக்கள்.

‘சிங்காரச் சென்னை’ என இன்றைக்கு தம்பட்டம் அடித்துக் கொள்ளலாம். அதனை உருவாக்க இரத்தத்தை வியர்வையாய் நாளும் சிந்தி, அரும்பாடு பட்டு உழைத்தது ஆதித்தொல்குடி மக்கள்தான்; சேரிகளிலும், குப்பங்களிலும் வாழும் மண்ணின் மக்கள்தான்.

சீமான்
சீமான்

அந்த மக்கள் இன்றைக்குத் தூய்மைப்பணியாளர்களாக நிற்கிறார்கள். அவர்கள் போராடியது பொன்னையோ, பொருளையோ கேட்டல்ல; அடிப்படை வாழ்வாதார உரிமையைக் கேட்டு! அதனை செய்துகொடுப்பதில் என்ன சிக்கல்?

ஒன்றியத்தை ஆளும் பா.ஜ.க அரசின் தனியார்மயத்துக்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் தி.மு.க அரசு, தமிழ்நாட்டில் தூய்மைப்பணியைத் தனியார்மயமாக்குவதற்காக இந்தளவுக்கு வரிந்துகட்டுவது ஏன்?

இதுதான் உங்கள் திராவிட மாடல் ஆட்சியா? போராடும் தூய்மைப்பணியாளர்களை ஏறெடுத்தும் பாராத உங்களுக்குக் கம்யூனிசம், சோசலிசம் குறித்தெல்லாம் பேசுவதற்குக் கூச்சமாக இல்லையா? மானக்கேடு!

‘ரோம் நகரம் பற்றி எரியும்போது நீரோ மன்னன் பிடில் வாசித்தது’ போல, மக்கள் அங்கே அல்லாடிக் கொண்டிருக்கும் வேளையில், திரைப்படம் பார்த்துப் பொழுதுபோக்குவது ஒரு முதல்வருக்கு அழகா? இழிநிலை!

தூய்மைப் பணியாளர்களைக் கைதுசெய்து, 8 வெவ்வேறு இடங்களில் இரவோடு இரவாக அடைத்து வைத்து, அடித்துத் துன்புறுத்தியது எல்லாம் பாசிசத்தின் வெறியாட்டம் இல்லையா?

கைதுசெய்யப்பட்டு 10 மணி நேரத்தைக் கடந்தும் காவலில் வைத்திருப்பது சட்டத்துக்குப் புறம்பானது இல்லையா?

போராட்டக் களத்தில் இருந்த சமூகச் செயற்பாட்டாளர்களான தங்கைகள் வளர்மதி மற்றும் நிலவுமொழி செந்தாமரை ஆகியோரை மிக மோசமாக அடித்துச் சித்ரவதை செய்ததில், நிலவுமொழிக்கு கை உடைந்திருப்பதும், வளர்மதி மயக்க நிலையில் இருப்பதுமான செய்திகள் வருகிறதென்றால் இங்கு நடப்பது மக்களாட்சியா? ஈவிரக்கமற்ற காட்டாட்சியா? பேரவலம்!

தூய்மைப்பணியாளர்களோடு ஒன்றாக அமர்ந்து உணவருந்தி, வேடமிட்டு நாடகமாடிய முத்துவேலர் கருணாநிதி ஸ்டாலின் அவர்கள், அடித்தட்டு உழைக்கும் மக்கள் மீது செலுத்தியிருக்கும் அரச வன்முறை வெட்கக்கேடு இல்லையா?

தூய்மைப் பணியாளர்கள் கைது - கூலி படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்
தூய்மைப் பணியாளர்கள் கைது – கூலி படம் பார்த்த முதல்வர் ஸ்டாலின்

தனியார்மயத்துக்கு ஆதரவாகவும், தனியார் முதலாளிக்கு ஆதரவாகவும் மண்ணின் மக்கள் மீது தொடுக்கப்பட்ட இத்தகைய கோரத்தாக்குதல்கள் தி.மு.க-வின் கொடுங்கோல் ஆட்சிக்கு முடிவுரை எழுதும் என்பது திண்ணம்.

திராவிட மாடலெனக் கூறி, அடக்குமுறை ஆட்சியைக் கட்டவிழ்த்துவிடும் ஆட்சியாளர்களே! உங்கள் அதிகாரத்திமிரும், பதவி மமதையும், ஆணவவெறியும் அடங்கும் நாள் வெகுதொலைவில் இல்லை!

கைதுசெய்யப்பட்ட தூய்மைப்பணியாளர்களை எவ்வித வழக்குகளுமின்றி, உடனடியாக விடுவிக்க வேண்டுமெனவும், அவர்களது நியாயமான கோரிக்கைகளை ஏற்று, அவர்களது பணி நிலைப்பையும், வாழ்வாதாரத்தையும் உறுதிசெய்ய வேண்டுமெனவும் வலியுறுத்துகிறேன்.

அதனைச் செய்யத் தவறும்பட்சத்தில், வரும் ஆண்டில் நடக்கும் சட்டமன்றத் தேர்தலில் மக்கள் தக்கப் பாடத்தைப் புகட்டுவார்களென எச்சரிக்கிறேன்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *