• August 14, 2025
  • NewsEditor
  • 0

சென்னை ரிப்பன் மாளிகைக்கு வெளியே, தனியார்மயமாக்கலுக்கு எதிராகவும், தங்களுக்குப் பணி நிரந்தரம் கோரியும் கடந்த 13 நாள்களாக அமைதியான முறையில் போராடிவந்த தூய்மைப் பணியாளர்களை போலீஸார் நேற்று நள்ளிரவில் வலுக்கட்டாயமாக கைதுசெய்தனர்.

போலீஸாரின் இத்தகைய கைது நடவடிக்கையின்போது, “எங்க வயித்துல அடிக்கிறீங்களே. தமிழ்நாட்டுல பொறந்த எங்களுக்கு வேலை இல்லையா? ஆந்திரா காரனுக்கு வேலை தர்றதுக்கு எதுக்கு எங்ககிட்ட ஓட்டு வாங்குன? ஆட்சி செய்ய முடியலைனா ராஜினாமா பண்ணிட்டு போங்க. இந்த ஆட்சி ஒழிக” என ஆதங்கத்துடன் பெண் தூய்மைப் பணியாளர்கள் முழங்கிய வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாகப் பரவிக் கொண்டிருக்கிறது.

தூய்மைப் பணியாளர்கள்

அதேசமயம், அ.தி.மு.க எடப்பாடி பழனிசாமி, பா.ம.க அன்புமணி ராமதாஸ், த.வெ.க விஜய் ஆகிய அரசியல் தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் முதல்வர் ஸ்டாலினின் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

அந்த வரிசையில், தவெக தேர்தல் மேலாண்மைப் பொதுச்செயலாளர் ஆதவ் அர்ஜூனா, “பெரியார் வழி ஆட்சியில் போராடும் பெண்கள் தூக்கி எறியப்படுகிறார்கள்” எனக் கண்டனம் தெரிவித்திருக்கிறார்.

தனது எக்ஸ் தளப் பக்கத்தில் ஆதவ் அர்ஜூனா, “வெயில், மழை, புயல், பெருந்தொற்று பாராது 20 ஆண்டுகளுக்கும் மேலாய் உழைக்கும் தூய்மை பணியாளர்களின் நியாயமான கோரிக்கைகளை கூட நிறைவேற்றாமல் இரவோடு இரவாக அவர்களை வன்முறையாக போராட்டக்களத்திலிருந்து அப்புறப்படுத்தியிருக்கிறது தி.மு.க அரசு.

இந்த முனைப்பையும் வேகத்தையும் அவர்களின் கோரிக்கைகளை நிறைவேற்றுவதில் காட்டியிருக்கலாமே.

ஆதவ் அர்ஜூனா
ஆதவ் அர்ஜூனா

பெரியார் வழியில் ஆட்சி என விளம்பரப்படுத்திக்கொள்ளும் இந்த ஆட்சியில் போராடும் பெண்கள் குண்டுக்கட்டாய் தூக்கி எறியப்படுகிறார்கள்.

அதிகாரம் தவறான கைகளில் போய் சேரும்போதெல்லாம் சர்வாதிகாரம் பிறக்கிறது.

அதற்கு இந்த தி.மு.க அரசும் ஒரு எடுத்துக்காட்டு. உங்களால் இடத்தை மட்டும்தான் மாற்ற முடியும்.

அந்த மக்களின் போராட்டக் குணத்தை அல்ல. இந்த எதேச்சதிகார மன்னராட்சி பாதிக்கப்பட்ட மக்களின் கண்ணீருக்கும் ஓலத்துக்கும் பதில் சொல்லித்தான் ஆகவேண்டும். அந்தக் கண்ணீர் விரைவில் தூக்கி எறியும் உங்கள் சர்வாதிகார ஆட்சியை” என்று தெரிவித்துள்ளார்.

Read More

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *