
மாலை நேரம்,
திருநெல்வேலி புதிய பேருந்து நிலையத்தின் வாயிலில் இரண்டு இனிமையான குரல்கள், சலசலக்கும் சாலையில் கவிமீட்டிக் கொண்டிருந்தன.
அருகே சென்றபோது இரண்டு பார்வையற்றவர்களின் குரல் எதிரே எதிரொலித்தது. அவர்கள் தங்களது பாடல்களைப் பாடி முடித்தபோது பேசத் தொடங்கினோம். அங்கிருந்த முத்துக்கிருஷ்ணன் பேசத் தொடங்கினார்…
“தச்சநல்லூரிலிருந்து நான் வருகிறேன். அங்கு ஒரு அறை எடுத்துத் தங்கி, சில இடங்களுக்குச் சென்று பாடல்களைப் பாடியே என் குடும்பத்தை நிர்வகித்து வருகிறேன். என் குடும்பம் பணக்குடியில் வசித்து வருகிறது. குடும்பத்தைப் பார்க்க வேண்டுமென்பதால் அதில் வருகின்ற வருமானத்திலேயே என் குடும்பம் இயங்கி வருகிறது. அரசு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்குகின்ற உதவித்தொகை ரூ.1,500ஆக இருக்கிறது.
உதவித்தொகையே இன்னும் கிடைக்கவில்லை
ஆனால் இன்றைய விலைவாசி உயர்வில் இவ்வளவு வருமானம் குடும்பத்தை நிர்வகிக்கப் போதாதல்லவா? அரசு வேலைகளுக்கும் முயற்சி செய்து பார்த்தோம். இன்று எம்.ஏ, பி.எட் படித்தவர்களுக்கே வேலை கிடைப்பதில்லையே?” என்று சொல்ல, முத்துக்கிருஷ்ணனோடு பாடிய ஐயப்பன் தொடர்ந்தார்.
” எனக்கு அரசின் மாற்றுத்திறனாளிகள் உதவித்தொகையே இன்னும் கிடைக்கவில்லை” என்றார் வேதனையுடன்.
மேலும் அவர், ” நான் இங்கு தான் வசித்து வருகிறேன். எனது குடும்பம் கடையத்தில் வசித்து வருகிறது. தற்போது குடும்பத்தில் ஒரு சிறு பிரச்னை. பாடல்கள் பாடி வருகின்ற வருமானத்தில்தான் எங்கள் வாழ்க்கைச் செல்கிறது” என்று கூறியபடி தனது மிமிக்ரி திறனையும் வெளிப்படுத்த ஆயுத்தமானார் ஐயப்பன்.

பாடல்களின் மூலமாகத்தான் வருமானம்
உடனே தன் மைக்கைத் தட்டி காகம் கரைக்கும் சத்தம், குழந்தையின் அழுகுரல், சத்யராஜின் குரல், சேவல் கூவுகின்ற சத்தம், நாய் குரைக்கின்ற சத்தம் என்று பல குரல்களை மிமிக்கிரி செய்து சலசலக்கும் சாலையையே தன் கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தார். பிறகு ஒரு இனிமையான பாடலையும் பாடி, “இசை சார்ந்த துறைகளில் அரசு எனக்கு வேலை தந்தால் போதும்” என்று நிறைவு செய்தார்.
இறுதியாக முத்துக்கிருஷ்ணன் கூறியதாவது, “எங்களுக்கு வருமானம் என்பது நாங்கள் பாடுகின்ற பாடல்களின் மூலமாகத்தான் கிடைக்கிறது. அரசு எங்களுக்கு ஏதேனும் ஒரு வேலை தந்தால் மிகவும் நன்றாக இருக்கும்” என்று சொன்னபடியே, “இது ஒரு பொன்மாலை பொழுது” என்கிறப் பாடலைத் தன் குடும்பத்தின் நிலையை மாற்ற மீண்டும் பாடத்தொடங்கினார்.