
நிரந்தரப் பணி, தூய்மைப் பணியை தனியார் மயமாக்கும் திட்டம் போன்றவற்றுக்கு எதிர்ப்பு தெரிவித்து தூய்மை பணியாளர்கள் கடந்த 13 நாள்களாகப் ரிப்பன் மாளிகைக்கு எதிரே போராட்டம் செய்து வந்தனர்.
நீதிமன்ற உத்தரவின் அடிப்படையில், காவல்துறை அவர்களை கலைந்துப்போகக் கூறியது. ஆனால், எங்களின் கோரிக்கை நிறைவேறும்வரை போராட்டத்தைக் கைவிடப்போவதில்லை என போராட்டக்காரர்கள் தெரிவித்தனர்.
இதற்கிடையில், நேற்று இரவு காவல்துறை போராட்டக்காரர்களை கைது செய்திருக்கிறது. இதற்கு பல்வேறு அரசியல் தரப்பிலிருந்து கண்டனங்கள் வந்து கொண்டிருக்கின்றன.
விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் துணைப்பொதுச்செயலாளர் வன்னி அரசு தன் எக்ஸ் பக்கத்தில், “சென்னை மாநாகராட்சியின் தூய்மை பணியாளர்கள் தங்களை நிரந்தரப்படுத்தக்கோரி கடந்த 13 நாள்களாக அறவழியில் போராடி வந்தனர்.
அவர்களது கோரிக்கை நியாயமானது என்பதை விடுதலைச் சிறுத்தைகள் தலைவர் திருமாவளவன் போராட்டக்களத்திற்கு சென்று ஆதரவு தெரிவித்தார். இடது சாரி கட்சித்தலைவர்களுடன் முதல்வரை சந்தித்து தூய்மை பணியாளர்களின் கோரிக்கைகளை நிறைவேற்ற வலியுறுத்தினார்.
இச்சூழலில், நீதிமன்ற உத்தரவின் பேரில் போராடும் மக்களை நள்ளிரவில் கைது செய்துள்ளது காவல்துறை. போராட்டத்தை ஆதரித்த பல சமூக செயற்பாட்டாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். சமூக செயற்பாட்டாளர் தோழர் வளர்மதி, வழக்கறிஞர் நிலவுமொழி போன்றோர் கைது செய்யப்பட்டு இரவு காவல்நிலையத்தில் வைக்கப்பட்டுள்ளனர். ஏன் கைது செய்கிறீர்கள்? என கேள்வி கேட்ட தோழர்கள் இருவரையும் போலீசார் கடுமையாக தாக்கியுள்ளனர். காவல்துறையின் இப்போக்கு வன்மையான கண்டனத்துக்குரியது.

சனநாயக ரீதியாக போராடிய மக்களையும் ஆதரவாளர்களையும் உடனடியாக விடுதலை செய்ய வேண்டும். நீதிமன்ற உத்தரவே சனநாயகத்துக்கு எதிரானதாகும். நீதிமன்றமும் காவல்துறையும் இணைந்து நடத்தும் மக்கள் விரோதப்போக்கு கவலைக்குரியதாக உள்ளது. தமிழ்நாடு அரசு உடனடியாக கைது செய்யப்பட்டோரை விடுதலை செய்வதோடு, போடப்பட்டுள்ள வழக்குகளை திரும்ப பெற வேண்டும் என விடுதலைச்சிறுத்தைகள் சார்பில் கோரிக்கை வைக்கின்றோம்.” எனக் குறிப்பிட்டிருக்கிறார்.